Tuesday, 24 March 2015

”நாங்க ஆட்சிக்கு வந்தால் 10வது பரீட்சை புத்தகத்தைப் பார்த்தே எழுதலாம்”


பீகார் பொதுத் தேர்வில் பிட் சப்ளை செய்த விஷயம் உலக அளவில் பேசப்பட்டு வரும் வேளையில், பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தான் ஆட்சிக்கு வந்தால் பத்தாம் வகுப்பு தேர்வை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதிப்பேன் என்று கூறியுள்ளார்.
பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன், வைஷாலி மாவட்டத்தில், தேர்வுக் கட்டிடத்தில் பெற்றோரும் நண்பர்களும் ஏறி தேர்வெழுதும் மாணவர்களுக்கு பிட் சப்ளை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊடகங்களில் இந்தப் படங்கள் வெளியாகி நாடு முழுவதும், பரபரப்பு ஏற்பட்டும் மறு நாள் இதே போல் பிட் விநியோகம் தொடர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுட்த முடியாத காவலர்கள் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதேநேரத்தில், இந்தப் பிரச்னை தொடர்பாக அறிக்கை தரும்படி, பீகார் அரசை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும், இது குறித்து முரன்பட்ட கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கூட்டம் ஒன்றில் வித்தியாசமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், ”மாநிலத்தில் எனது அரசு இருந்திருந்தால், தேர்வின்போது பார்த்து எழுத மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் படித்தவர்களால்தான், அதைப் பார்த்து தேர்வை எழுத முடியும்.”
”புத்தகத்தை படிக்காதவர்கள், தேர்வு முடிந்த பிறகும், புத்தகத்தில் விடைகளைத் தேடிக் கொண்டுதானிருப்பார்கள் என்றார். 10ம் வகுப்பு தேர்வின் போது, மாணவர்கள் பார்த்து எழுதுவதில் தவறில்லை.”
”மாணவர்கள் காப்பி அடிப்பதற்கு, 'பிட்' சப்ளை செய்ய, பெற்றோரும், நண்பர்களும் மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். பல்லிகள் போல, பெரிய கட்டடங்களில் ஏறி, 'பிட்' கொடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இதற்கு ஆதரவாக பா.ஜ.க., மூத்த தலைவர், "அமெரிக்காவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தேர்வின்போது புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறை உள்ளது. இதே வழக்கம், பிற நாடுகளிலும் உள்ளன. புத்தகத்தைப் படித்த மாணவர்களால்தான், விடைகளை தேடிக் கண்டுபிடித்து எழுத முடியும் என்ற கருத்து அந்நாடுகளில் உள்ளது” என்று கூறியுள்ளார்.
பிட் பிரச்சனையால், நாடு முழுவதும், பீகார் மாநிலத்தை முகச் சுளிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், பீகார் மக்களின் செயலை அம்மாநில முதல்வர்கள் நியாயப் படுத்தி பேசுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment