பாலிவுட் நடிகர் சசி கபூருக்கு, திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்த மதிப்பு மிக்க பால்கே விருதைப் பெறும் 46-வது நபர் சசிகபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய சசிகபூர், 1938ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். தனது நான்கு வயது முதலே நடிக்கத் தொடங்கிய அவர், இதுவரை 160-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார்.
இந்தி படங்கள் மட்டுமல்லாது, ஆங்கிலப் படங்களிலும் நடித்திருந்த சசி கபூருக்கு, இந்திய அரசு 2011ம் ஆண்டு, பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்திருந்தது.
1997ம் ஆண்டு வெளியான ஜூனூன் படத்திற்கு, சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும்,1986ம் ஆண்டு, நியூ டெல்லி டைம்ஸ் படத்திற்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும்,1993ம் ஆண்டு வெளியான முஹாபிஜ் படத்திற்காக, ஸ்பெஷல் ஜூரி பிரிவிற்கான தேசிய விருதையும், சசி கபூர் பெற்றுள்ளார்.
2010ம் ஆண்டில், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு சசிகபூருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கெளரவித்தது. இந்நிலையில், தற்போது திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது சசிகபூருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை சசிகபூருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவீட்டில், "சசி கபூர்ஜி ஒரு சிறந்த நடிகர். திரைப்படத் துறையில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர். தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment