Tuesday, 24 March 2015

நட்பின் அடையாளம்... பால் வாக்கர் பெயரை தன் மகளுக்கு வைக்கும் வின் டீசல்!!


உலகம் முழுவதும், கார் பிரியர்களுக்கும், ஹாலிவுட் பிரியர்களுக்கும், ஃபேவரைட்டான திரைப்படம் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ். இந்த திரைப்படத்தின் ’ப்ரைன் ஓ கார்னர்’ கதாபாத்திரம் குறித்து அனைவருக்கும் தெரியும்.
படத்தில் அதிவேகமாக கார் ஓட்டி அசத்திய இவர் கடந்த 2013ல், நிஜத்தில் கார் விபத்தில் சிக்கி மாண்டார். இவரது இறப்பினால் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ரசிகர்கள் அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர்.
இவர் நடித்துக் கொண்டிருந்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் தொடரின் 7ம் பாகத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே இவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து அவர் பாதி நடித்த ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கான சிறப்பு விழாவின் போது பேசிய படத்தின் கதா நாயகன் வின் டீசல், தன் மகளுக்கு தன் திரையிலும், நிஜத்திலும் தன் நண்பரான பால் வாக்கரின் நினைவாக பெயர் வைக்க இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த 16ம் தேதி வின் டீசலுக்கும், அவரது காதலி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஃபேஸ்புக் மூலம் தெரிவித்தார். இவர்களுக்கு ஏற்கனவே, ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இவர்களை அடுத்து பிறந்திருக்கும் குழந்தைக்கு பால் வாக்கரின் நினைவாக ‘பவுலின்’ (Pauline) என்று பெயரிடப் போவதாக வின் டீசல் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் வின் டீசல் கூறியதாவது:
“வேறு யாரையும் ஒரே கருவில் பிறந்தவர்களைப் போல் நான் நினைத்ததில்லை. ஆனால் பவுல்... அவன் ஒரு அற்புதமான ஆன்மா...
அவனுடைய நினைவை சுமந்து கொண்டிருப்பது, என் நினைவின், என் வாழ்வின் ஒரு பகுதி. திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது.
ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என் சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன்.“

No comments:

Post a Comment