ஹாங்காங்கைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான், 2022 ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக பாடலொன்றை பாடவுள்ளார். 2022 ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு சீனாவின் பெய்ஜிங் நகரம் விண்ணப்பித்துள்ளது.
இதற்கான பிரசாரத்துக்காக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடவுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நகரை தேர்வுசெய்யவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள் அடுத்தவாரம் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்யவுள்ளனர்.
இதன்போது, ஜாக்கி சானின் பாடல் முதல் தடவையாக இசைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை பெய்ஜிங் நடத்தியது. 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அங்கு நடைபெற்றால், இரு வகையான ஒலிம்பிக் விளையாட்டு விழாவையும் நடத்திய முதல் ஆசிய நகரமாக பெய்ஜிங் விளங்கும்.
60 வயதான ஜாக்கி சான், நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் ஆங்கில, சீன மொழிகளில் ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிப் போட்டிகளை நடத்தும் உரிமையை பெறுவதற்கான பிரசாரத்திற்காகவும் அவர் பாடல் ஒன்றை பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment