Thursday, 19 March 2015

”தமிழில் இலங்கை தேசிய கீதம் பாடலாம்” மைத்திரி உத்தரவிற்கு வரவேற்பு..!


இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாடலாம் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உறுதிஅளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையின் தேசிய கீதம் இலங்கையின், பெரும்பான்மை மொழியான சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று இலங்கையின் முந்தைய ராஜபக்ஷ ஆட்சியில் புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டுப்பாட்டை நீக்கி தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாடலாம் என்று மைத்தி பால சிறிசேன சுற்றரிக்கை விடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய கீதம், 1940ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேய ஆட்சியில் இருந்த போதே ஆனந்த சமரக்கோன் என்பவரால் இயற்றப்பட்டது.
1951ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ், சிங்களம், உட்பட பல மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது. எம். நல்லத்தம்பி என்ற தமிழ் புலவர் தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 12, 2010ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை அரசு வெற்றி கொண்டதை அடுத்து, அப்போதைய இலங்கை உள்துறை அமைச்சர் ஜான் சேனாதிராசா, அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்தார்.
அதில், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள், தேசியகீதத்தில் அதிக அளவு ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டு தமிழில் தேசிய கீதத்தை பாட தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
இதனை ராஜபக்ஷ அரசு ஏற்றுக் கொண்டது. இதனை அடுத்து இலங்கை முழுவதும் தமிழில் இலங்கை தேசிய கீதத்தை பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இலங்கைக்கு வெளியில் தமிழிலேயே தேசிய கீதத்தை பாடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினடம் இது குறித்து பேசியதை அடுத்து, தடையை நீக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் மொழியில் தேசியகீதத்தைப் பாடலாம் என புதிய ஜனாதிபதி உறுதியளித்திருப்பதை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment