Tuesday, 3 March 2015

டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு.. ஓகே ஆகுமா கண்மணி..!


தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் மணிரத்னம் சைலண்டாக ஒரு படத்தை இயக்கிவருகிறார் என்றும் அந்த படத்திற்கு ‘ஓ.கே.கண்மணி' என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. பிறகு இந்தப் படத்திற்கு ''ஓ காதல் கண்மணி'' என பெயர் வைத்தாகவும் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.
இந்தப் படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் யு-டியூபில் வெளியானது.
1 நிமிடம், 22 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில் மணிரத்னத்திற்கே உரிய டச் தெரிகிறது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் அருமையாக உள்ளன. மேலும் இந்த டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், மீண்டும் ஒரு அலைபாயுதே படத்தைப் பார்ப்பதுபோல் இளமைத்துள்ளலுடன் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
டிரைலர் வெளியாகி 3 நாட்களுக்குள் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதை பார்த்து ரசித்துள்ளனர். மணிரத்னத்தின் கேரியரில் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை. அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் கிடைத்தது.
முந்தைய தோல்விகளை துடைத்துப்போட்டுவிட்டு மணிரத்னத்துக்கு மிகப்பெரிய வெற்றியை ஓ காதல் கண்மணி படம் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவிவருகிறது. மேலும் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment