தமிழகத்தின் பட்ஜெட் தாக்கல் நேற்று நடந்து முடிந்தது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும், வழக்கம் போல், உன்னதத் தலைவி, புரட்சித் தலைவி, போற்றுதலுக்குரியவர் என்று ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் முதல்வர் ஓ.பி.எஸ். அதோடு, அடுத்த முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் தாக்கலின் போது ஓ.பி.எஸ்., பேசியதாவது:
வாஞ்சையே உருவாய் வள்ளலே திருவாய், தமிழகத்தை நடத்தும் எங்கள் அம்மா, வஞ்சகத்தை தகர்த்து எறிந்து நெஞ்கத்தை உயர்த்தி நிற்கும், தென்னகத்தின் தமிழகமே, தேசியத்தின் முதலிடமாய், விருது மேல் விருது வாங்கும் எங்கள் அம்மா, 3 எழுத்து மந்திரம் எங்கள் அம்மா, நானே வணங்கும் நான்காம் தமிழ், எட்டாம் அறிவு, ஒன்பதாம் வள்ளல், வாழ்வெல்லம் வழிநடத்தும் எங்கள் அம்மா, மாண்பு மிகு அம்மாவின் பொற்பாதங்களில் எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்
தமிழகத்தின் விடிவெள்ளி, ஏழைகளின் ஏந்தல், அப்பழுக்கற்ற செயல்களால் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மாண்புமிகு அம்மாவின் ஆசியுடன் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். தொடர்ந்து 5 வது முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு கொடுத்த அம்மாவுக்கு நான் என்றென்றும் நன்றி கடமைப்பட்டுள்ளேன்.
காவிரி, முல்லை பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றது. மின்சக்தி உற்பத்தியை பெருக்கியது, துணிச்சலான நடவடிக்கை எடுத்த எங்கள் தன்னிகரில்லா தலைவி, செயலாற்றி வெற்றி கண்ட எங்கள் தலைவியின் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் கண்டுள்ளது.
இன்னும் மும்முனை திட்டம் தொடரும். மதி நுட்பம் வாய்ந்த தன்னிகரில்லா தலைவி புரட்சித்தலைவி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றுள்ளார். வறட்சி காரணமாக வரி உயரவில்லை. பெட்ரோல் விலை மாற்றம் காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் பாதிக்கப்பட்டது.
சமூக திட்டங்கள் காரணமாக நிதிச்சுமை அதிகரித்து விட்டது. பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு பெரும் நிதிச்சுமையை தாங்க வேண்டியுள்ளது
அரசின் உயிராகவும், உணர்வாகவும் உள்ள எங்களின் கருணை மிகுந்த தலைவி, எங்களின் செயல்பாட்டிற்கான கொள்கையாக வகுத்துத் தந்துள்ளார். அதனால்தான், உன்னத தலைவியாகிய புரட்சித்தலைவி அம்மாவின் எழுச்சிமிகு ஆற்றலினால் வழிநடத்தப்படும் இந்த அரசு கடினமான நிதிச் சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள போதிலும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை முனைந்து செயல்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழக மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தமிழக மக்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி அம்மாவின் வழி காட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த பேரவைக்கு தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்.
புரட்சித்தலைவி அம்மா காட்டும் வழியில் அயராது பயணிக்கும் அதே வேளையில், மீண்டும் புரட்சித்தலைவி அம்மா முதல் அமைச்சராகப் பதவியேற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும் இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வழி நடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment