கோடைக் காலம் வந்து விட்டது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய காலம் நமக்கு வந்து விட்டது என்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு தீர்ப்புக்கு இந்தியா முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தீர்ப்புத் தேதியை அறிவிக்காமல் நீதிபதி வழக்கை தள்ளி வைத்துள்ளார். அதே வேளை வழக்கு சம்பந்தமாக ஜெ.,வின் சொத்துக்களும் கணக்கிடப்பட்டு வருகின்றன. இதனால், அ.தி.மு.க., முழுவதும் பெரும் பதற்றத்துடன் உள்ளது.
இந்நிலையில், கோடை வரும் வேளையில், மக்களின் தாகத்தை தணிக்க, அ.தி.மு.க.வினர் மறவாமல் நீர் மோர் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா தம் கட்சியினருக்கு அறிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
"மக்கள் நலப் பணிகளை தன்னலம் கருதாது ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்துவதில் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' எப்பொழுதும் முன்னணியில் இருந்து வருவதை மக்கள் நன்கு அறிவர். அந்த வகையில், அதிமுகவினர் தற்போது ஆற்ற வேண்டிய பணி ஒன்றினை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
அது தான் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் பணி. வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கிவிட்டதால், அதிமுகவினர் தாங்கள் வாழும் பகுதிகளில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், மதியம் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.”

No comments:
Post a Comment