நடப்பு சாம்பியனாக திகழும் இந்திய அணி நாளை 11வது உலகக் கோப்பை போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது.
ஆஸியின் சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி 9 மணிக்கு தொடங்க உள்ளது இந்த போட்டி. இந்த போட்டியில் இந்தியாவின் மீது ஒட்டு மொத்த ஆசியாவும் நம்பிக்கை வைத்துள்ளது.
கடந்த 23 ஆண்டுகளாக எதாவது ஒரு அணியாவது இறுதிப் போட்டியில் நுழைந்துவிடும். ஆனால், இந்த வருடம் இந்தியாவை தவிர மற்ற ஆசிய அணிகளான, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் கால் இறுதியிலேயே வெளியேறிவிட்டன. இதனால் இந்த பெருமையை இந்தியா காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
எனவே, நான்கு முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வெல்ல இந்தியா மீண்டும் வாய்ப்பளிக்குமா அல்லது கோப்பையை தன்னிடம் தக்க வைக்கும் முயற்சியில் இறங்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
ஏற்கனவே, இந்திய வீரர்களை மனதளவில் தாக்கும் முயற்சிகளில் ஆஸி வீரர்கள் இறங்கிவிட்டனர். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு விளையாடிய டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மிகவும் மோசமாக தோற்றுள்ளது. இதனை ஒரு சில ஆஸி வீரர்கள் தற்போது கூறி இந்திய வீரர்களை மனதளவில் பலவீனமாக்க முயற்சி செய்கின்றனர்.
மேலும், ஆஸ்திரேலிய பவுலர் மிச்செல் ஜான்சன், ‘நான் நிச்சயம் இந்திய பேட்ஸ்மேன்களை சீண்டுவேன்’ என்று கூறியுள்ளார். எனினும் இதுவரை இந்திய வீரர்கள் எதற்கும் பதிலளிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.
இந்த தொடரில் அந்த அளவு சிறப்பாக ஜொலிக்காத கோலி தனது காதலி அனுஷ்காவின் வருகையை அடுத்து நாளை சிறப்பான ஆட்டத்தை வெளிப்பட்டுத்துவார் என்று நம்பலாம்.
மேலும், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தாலும், ஆஸி அணியில் அந்தளவிற்கு சுழல்பந்து வீரர்கள் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. சிட்னி மைதானம் சுழல் பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment