Saturday, 21 March 2015

உலகின் மிகச் சிறந்த ஆசிரியர்….!


உலகின் மிகச் சிறந்த ஆசிரியருக்கான 10 லட்சம் டாலர் (13 கோடி ரூபா) பரிசுப்பணம் கொண்ட விருதை அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியையான நான்சி அட்வெல் வென்றுள்ளார். தான் கற்பிக்கும் பள்ளிக்கே இப்பரிசுப்பணத்தை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற பூகோ கல்வி மற்றும் திறமை மாநாட்டில் கடந்த ஞாயிறன்று இவ்விருதின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமரும் உப ஜனாதிபதியும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் பின் ரஷீட் அல் மக்தூம் இவ்விருதை கையளித்தார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் இந்நிகழ்வில் பங்குபற்றினார். Varkey GEMS Foundation எனும் அமைப்பினால் முதல் தடவையாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பில் கிளின்டன், ஹிலாரி கிளின்டன், பில்கேட்ஸ் பவுண்டேசன் மற்றும் உலகின் பல நாடுகளின் தலைவர்கள் இத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 127 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 ஆசிரியர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் அமெரிக்காவின் நான்ஸி அட்வெல், நயோமி வொலெய்ன், ஸ்டீபன் ரிட்ஸ், ஆப்கானிஸ்தானின் அஸிஸுல்லா ரோயேஸ், இந்தியாவின் கிரன் பீர் சேத்தி, மலேஷியாவின் மெதன்ஜித் சிங், ஹெய்ட்டியின் கய் எட்டெய்னி, கென்யாவின் ஜக்குலின் கஹுரா, கம்போடியாவின் நியாங் பல்லா, பிரிட்டனின் ரிச்சர்ட் ஸ்பென்ஸர் ஆகியோர் 10 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
இவ்விருதை வென்ற நான்ஸி அட்வெல், அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்திலுள்ள பள்ளி ஒன்றை 1990 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அங்கு ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். அப்பள்ளியின் ஒவ்வொரு அறையிலும் ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கற்கும் மாணவர்கள் சராசரியாக வருடாந்தம் 40 நூல்களை வாசிக்கின்றனர்.
ஆசிரியப் பணி தொடர்பான 9 நூல்களையும் நான்ஸி எழுதியுள்ளார். அவர் எழுதிய In the Middle எனும் நூலின் 5 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது. விருதை வென்றபின் பரிசுப்பணத்தை தனது பள்ளிக்கே வழங்குவதாக நான்ஸி அட்வெல் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்

No comments:

Post a Comment