Wednesday, 18 March 2015

பரிதாபமாக உலகக் கோப்பையில் தோற்று வெளியேறிய இலங்கை!!


உலகக் கோப்பை போட்டியில் லீக் போட்டிகள் முடிவுபெற்று கால் இறுதி போட்டிகள் இன்று ஆரம்பித்துள்ளன. இதில் முதல் கால் இறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் மோதின.
இதில் தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட் செய்ய தீர்மானித்தது. இறுதி போட்டிக்கு செல்லவேண்டும் என்ற கனவுடன் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது.
இதனால் அந்த அணி 37.2 ஓவர்களில் 133 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக சங்கக்காரா 45 ரன்களும், திரிமன்னே 41 மற்றும் கேப்டன் மேத்யூஸ் 19 ரன்களும் அடித்தனர்.
இதனால், சச்சினின் 6 சதங்கள் சாதனையை சங்கக்காரா முறியடிப்பார் என்ற கனவு கனவாகவே போனது. இந்த அணியின் சங்கக்காரா மற்றும் ஜெயவர்த்தனே இந்த உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும், டூம்னி 3 விக்கெட்டுகளையும், மோர்கல், ஸ்டெயின் மற்றும் அப்பாட் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 18 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து எளிதில் 134 ரன்கள் எடுத்து அரையிறுதிக்கு தேர்வானது. டி காக் 78 ரன்களும், டி ப்ளேசிஸ் 21 ரன்களும், ஆம்லா 16 ரன்களும் எடுத்தனர்.
நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாகிர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment