Wednesday, 25 March 2015

6 மாதத்திற்குள் தேசிய அளவில் பதவி!! காங்கிரஸில் கலக்கும் குஷ்பு!!


கட்சியில் சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில், நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியுள்ளது. இதனால், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
தி.மு.க.,வில் இருந்து விலகி இருந்த குஷ்பு கடந்த நவம்பர் 26ம் தேதி காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸில் இருந்து ஜி.கே. வாசன் விலகி இருந்த தருணத்தில் குஷ்பு வந்தததால் அவருக்கு தமிழக காங்கிரஸில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே, கூட்டங்களில் முக்கிய இடமும் வகித்தார். இதுவே, காங்கிரஸ் பிரமுகர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மகளிர் அணியினர் சிலர் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில், தமிழக மகளிர் காங்கிரஸ் பதவியில் குஷ்பு நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. இளங்கோவன் மேலிடத்திடம் குஷ்புவை நியமிக்க வேண்டும் என்று சிபாரிசும் செய்தார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் அகில இந்திய செய்தி தொடர்பாளர்கள் 17 பேர் கொண்ட பட்டியலை சோனியாகாந்தி வெளியிட்டார். சற்றும் எதிர்பாராத விதமாக இதில், குஷ்புவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருந்த ஜெயந்தி நடராஜனின் இடத்தை டெல்லி மேலிடம் குஷ்பு மூலம் நிரப்பியுள்ளது.
காங்கிரஸில் பல காலம் பணியாற்றி வரும் மூத்த தலைவர்கள் பதவி ஏதும் இல்லாது இருக்கும் வேளையில், கட்சியில் சேர்ந்து 6 மாதம் கூட ஆகாத நிலையில், குஷ்புவுக்கு தேசிய பொறுப்பு கொடுத்திருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி மேலிடத்தின் இந்த செயலால், தேசிய அளவில், மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதே வேளை, புதிய் பதவி பற்றி செய்தியாளர்களிடம் குஷ்பு பேசுகையில், ”முக்கிய பொறுப்பை தந்துள்ளனர். சோனியா, ராகுலுக்கு நன்றி தெரிவிப்பதோடு அவர்களின் நோக்கத்தையும் நிறைவேற்றுவேன். காங்கிரஸ் பக்கம் எந்த தவறும் கிடையாது. அதனால் எதிர்கட்சிகளுக்கு சரியான கவுன்ட்டர் கொடுப்பேன். அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்கமாட்டேன். உண்மையை சொல்ல பயப்பட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment