அமெரிக்காவின் வடக்கு பகுதியில் குளிர்காலம் துவங்கிவிட்டது. இன்னும் சுமார் 20 நாட்களுக்கு அங்கு பனிப் பொழிவு கொட்டித் தீர்க்கும். ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் இந்த பனிப் பொழிவுக்கு ஏற்றபடி அமெரிக்கர்கள் தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிதாக விழுந்த பனியின் மீது உப்பைத் தெளித்து கெட்டி ஆக்குவது, பனியில் செல்லக் கூடிய நல்ல டயர்களை கார்கள் மற்றும் பைக்குகளில் பயன்படுத்துவது, என்று எல்லாவற்றிற்கும் ஆயத்தமாக இருப்பார்கள் வடக்கு பகுதி அமெரிக்கர்கள்.
இதனால், பனிப் பொழிவால் இயல்பு வாழ்கைக்கு அங்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அமெரிக்காவின் டல்லஸ் நகரில் அப்படி இல்லை. இங்கு பனிப் பொழிவு என்பது ரொம்பவும் குறைவு, முன்னேற்பாடுகளும் குறைவு.
அதனால் இங்கு பனிப் பொழிவு புதிது என்றே கூறலாம். இதுவரை வருடத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களே வந்த பனிப் பொழிவு, இந்த ஆண்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.
விடாமல் பொழியும் பனிப் பொழிவால், டல்லாஸ் மக்கள் தத்தளித்து வருகின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பணிகளும் பெரும்பாலும் மதியம் வரையே நடந்து வருகின்றன. கடந்த வாரம் பனிப் பொழிவால் டல்லஸ் விமான நிலையத்தில் சுமார் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இரு தினங்களுக்கு முன், விடாது பொழிந்த பனியால், 30 நிமிட பயணத்திற்கு விமானப் பயணத்துக்காக பயணிகள் 9 மணி நேரம் வரை காத்துக் கிடந்தனர். இது மட்டுமல்லாது, இந்த பனியின் தாக்கத்தால் நேற்றைய முந்தினம் மட்டும் டல்லஸில் 500 விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டல்லஸ் பயணிகளுக்கு இந்த அளவு பனிப் பொழிவு புதிது என்பதால், வாகன ஓட்டிகள் தினறினர். வழுக்கும், பனிச் சாலைகளில் வாகனங்களை செலுத்தத் தெரியாமல் மற்ற வாகனங்கள் மீது மோதியுள்ளனர். இப்படி, டல்லஸ் முழுவதும் ஏற்பட்ட சிறு சிறு, விபத்துக்களால், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
கூகுள் மேப்ஸில் டிராஃபிக் நகரம் முழுவதும் நிறைந்திருந்ததாகக் காட்டியதைக் அடுத்து இந்த செய்தி அமெரிக்கா முழுவதும் பரவி பரபரப்பானது. இங்கு முன்னேற்பாடுகள் குறைவு என்பதாலும், பனிப் பொழிவில் ஓட்டிப் பழக்கப்படாத ஓட்டுனர்களாலும் இந்த அளவுக்கு விப்பத்துக்களும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment