பிரிட்டனைச் சேர்ந்த நீதிபதிகள் சிலர் கணினிகளில் ஆபாசப்படம் பார்த்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதனால் மூன்று நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் மற்றொருவர் சுயமாக ராஜினாமா செய்துள்ளார்.
மாவட்ட நீதிபதிகளில் ஒருவரான திமோதி போல்ஸ், குடிவரவு நீதிபதி வாரண் கிராண்ட், மாவட்ட பதில் நீதிபதியான பீட்டர் புலோக் ஆகியோரே பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்களாவர். பிரித்தானிய குடிவரவுத் துறை நீதிபதியான அன்ட்ரூ மாவ் விசாரணைகளுக்கு முன்னரே ராஜினாமா செய்துள்ளார். இவர் ராஜினாமா செய்திருக்காவிட்டால் அவரும் பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் நால்வரும் தமது உத்தியோகபூர்வ பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட கணிணிகள் மூலம் ஆபாசப்படங்களை பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். இந்நீதிபதிகள் நால்வரினதும் நடவடிக்கைகள் ஒன்றுக் கொன்று தொடர்புபட்டவை அல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய சட்டப்படி ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றச் செயல் அல்ல என இவர்களின் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், இது குறித்து விசாரணை நடத்திய பிரிட்டனின் லோர்ட் சான்ஸ்லராக பதவி வகிக்கும் கிறிஸ் கிறேலிங் மற்றும் பிரதம நீதிபதியான தோமஸ் பிரபு ஆகியோர் நேற்றுமுன்தினம் தமது தீர்ப்பை வெளியிட்டனர். மேற்படி நீதிபதிகள் நால்வரும் ஆபாசப்படங்களை பார்ப்பதற்கு உத்தியோகபூர்வ கணினிகளை பயன்படுத்தியமையான நடவடிக்கை மன்னிக்க முடியாத துஷ்பிரயோகச் செயல் என விசாரணை நடத்திய நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் பிரித்தானிய நீதித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நீதிபதிகள் பதவியிலிருந்து அகற்றப்படுவது அரிதாகும். ஆனால், தற்போது ஒரே தடவையில் நால்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்டிருப்பது முன்பு ஒருபோதும் இடம்பெறாத விசயமாகும்.

No comments:
Post a Comment