Friday, 20 March 2015

வாட்ஸ் அப் மூலம் +2 வினாத்தாள் அனுப்பிய ஆசிரியர்கள்!!?


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலமாக மாணவர்களுக்கு கேள்விக்கான விடையை அளித்ததாக அந்த பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18 ஆம் தேதி +2 கணித தேர்வின் போது விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதும் அறையில் சிறப்பு பறக்கும்படையினர் சோதனையிட்ட போது, அந்த அறைக்கு கண்காணிப்பாளர்களாக அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிந்தனர்.
அப்போது கண்காணிப்பாளர் மகேந்திரன் தனது செல்போன் மூலம் கேள்வித்தாளை வாட்ஸ் அப்பில் பதிவு செய்து அனுப்பியதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவர் அனுப்பிய வாட்ஸ் அப் எண்களை ஆய்வு செய்ததில் பள்ளியின் முதல்வர் சம்பத், உடன் பணியாற்றும் ஆசிரியர் உதயகுமார் ஆகியோருக்கு அனுப்பியிருப்பதை கண்டுபிடித்தனர்.
மகேந்திரனிடம் ஒரு குழு விசாரணை நடத்தி கொண் டிருக்கும்போதே அருகில் உள்ள மற்றாரு தேர்வறைக்கும் இரண்டாவது குழுவினர் சென்றனர். அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அதே பள்ளியின் மற்றொரு ஆசிரியர் கோவிந்தனும் செல்போன் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் கேள்வித்தாளுடன், சிலவற்றுக்கான விடைகளும் பதிவு செய்யப்பட்டிருந்ததை பார்த்து பறக்கும்படையினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த செல்போன்களில் கணக்கு பாடத்திற்கு முன்பு நடந்த வேறு சில பாடங்களுக்கான குறிப்புகளும் இருந்ததையும் பறக்கும்படையினர் கண்டுபிடித்தனர். இதில் கேள்வி அனுப்பப்பட்ட சிறிது நேரத்தில் அதற்கான விடைகளை வாட்ஸ் அப் மூலம் பெற்று மாணவர்கள் பிட் அடிக்க அவர்களே உதவி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனை தொடர்ந்து நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியில் அதே பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டது கல்வித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ், நல்லூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாது, முறைகேடு சர்ச்சையில் சிக்கிய பள்ளியின் முதல்வர் சம்பத் ஆகியோரிடமும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை தொடரும் போது இன்னும் பல அதிகாரிகள் சிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment