நேபாள் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் துருக்கி விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையை விட்டு விலகி தரையில் மோதியது. விமானம் புல்தரையில் ஓடியதால், விமான நிலையத்தில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.
இருப்பினும், விமானத்தில் பயணம் செய்த 227 பயணிகளும், 11 பணியாளர்களும் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேற்று புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரையிறங்க தயாரானது.
சிக்னல் கிடைத்ததும், விமானம் ஓடுபாதையை நெருங்கியபோது கடும் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை நிலவியதால் விமானியால் ஓடுபாதையை துல்லியமாக கணிக்க முடியாமல் போனது. இந்நிலையில், விமானம் ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் ஓடியது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.
உடனடியாக அவசர வாசல் வழியாக அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். விமானம் தரையில் பதிந்ததால் அதன் முன்பகுதியும், முன்சக்கரமும் சேதம் அடைந்தது. கடந்த ஒரு வாரமாக நேபாளில் கடும் மழை பெய்து வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

No comments:
Post a Comment