ஐ.எஸ். தீவிரவாதிகள், சிரிய அரசாங்கத்திற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் மூவருக்கு தம்மால் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர்.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்த வீடியோ காட்சி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த 8 நிமிட வீடியோ காட்சியில் சிரிய டெயிர் எஸ் - ஸோர் பிராந்தியத்தில் புழுதி நிறைந்த வீதி ஒன்றின் மத்தியில் மேற்படி மூவரும் மண்டியிட்டு அமர்ந்திருக்கின்றனர். லிபியாவில் 30 க்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை தம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியதற்கு மறுநாளே இந்த தண்டனை நிறைவேற்றம் இடம்பெற்றுள்ளது.
தண்டனை நிறைவேற்றத்திற்கு உள்ளான மூவரும் செம்மஞ்சள் ஆடை அணிந்து கைகளும் கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் அழுக்காக நிலவறையொன்றில் அமர்ந்திருப்பது, அவர்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் அரேபிய மொழியில் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வேன் ஒன்றில் ஏற்றப்படுவது, அவர்கள் மூவரும் வேனிலிருந்து இறக்கப்பட்டு துப்பாக்கிகள் உடன் தீவிரவாதிகள் காவல் காக்க வீதியொன்றில் அணிவகுத்து அழைத்துச் செல்லப்படுவது, அதன் பின் அவர்கள் அடையாளம் தெரியாதவாறு முழுமையாக கறுப்பு ஆடை அணிந்திருந்த தீவிரவாதி ஒருவரால் ஒருவர் பின் ஒருவராக தலையை வெட்டி படுகொலை செய்யப்படுவது ஆகிய காட்சிகளை அந்த வீடியோ காட்சி உள்ளடக்கியிருந்தது.
மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு முன் தலையை வெட்டுவதற்கான வாள் தீவிரவாதிகளால் கூர்மையாக்கப்படுவதும் அந்த வீடியோ காட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றத்திற்கு உள்ளானவர்கள் மூவரும் 35 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என நம்பப்படுகிறது.

No comments:
Post a Comment