ரஷ்யாவின் ஆளில்லா விண்கலமான ‘பிராக்ரஸ் எம்-27எம்’, பூமியின் வெளியில் உள்ள சுற்றுப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அவ்வின்கலம் பூமியில் மோத வாய்புள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ஆராய்ச்சியாளர்களால் கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது, ‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலம்.
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) ‘பிராக்ரஸ் எம்-27எம்’ கலத்தின் மூலம் 880 கிலோ உந்துகருவி (புரொபெல்லன்ட்), 50 கிலோ ஆக்சிஜன், 420 கிலோ குடிநீர், 1,418 கிலோ உதிரி பாகங்கள், அறிவியல் பரிசோதனை வன்பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றது இந்த ஆளில்லா விண்கலம்.
விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் ‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலம் வரும் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது கட்டுப் பாட்டை இழந்துள்ள ‘பிராக்ரஸ் எம்-27எம்’ வேகமாக திரும்பிப் பாய்ந்து கொடிருக்கிறது. அது பூமியில் விழுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ரஷ்ய விண்வெளி ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறியது பின்வருமாறு:
“அது திரும்ப வந்து கொண்டிருக் கிறது. அது வேறெங் கும் செல்வதற்கு வாய்ப் பில்லை. நிலைமை கட்டுப்பாட்டைமீறிச் செல்வது தெளிவாகி விட்டது. இருப்பினும், அந்தக் கலத்தை பத்திர மாக மீட்பதற்கான முயற் சிகளை தொடர்ந்து வருகிறோம். அது எப்போது பூமியில் விழும் என்பதை கணிப்பது கடினம்”.
‘பிராக்ரஸ் எம்-27எம்’ விண்கலத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்த முயற்சிகள் அனைத்து தோல்வியில் முடிந்து வருகின்றன.
1961ம் ஆண்டு விண்வெளிக்கு முதன்முதலில் மனிதனை அனுப்பியது ரஷ்ய ஆராய்ச்சிக் குழு தான். இந்நிலையில், இந்த விண்கலத்தை விண்வெளியில் இழந்தமை ரஷ்யவிஞ்ஞாணிகளுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பூமியில் இவ்வாறு மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் மோதுவது இது முதன் முறை அல்ல. இதற்கு முன்பாக நாசா அனுப்பிய ஸ்கைலாப் விண்கலம் 1979-ம் ஆண்டு தனது சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி விழுந்தது. 77.5 டன் எடை கொண்ட ஸ்கைலாப் 1979ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள எஸ்பரன்ஸ் நகரில் துண்டு துண்டாக வெடித்துச் சிதறி கீழே விழுந்தது.
இது குடியிருப்புகள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது. ஆனால், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. ஆஸ்திரேலியாவில் விழுந்ததற்காக, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கோரினார். இது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட சிறிதும் பெரிதுமான சுமார் 8,000 பொருட்கள் விண்ணில் சுற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்றிரண்டு பொருட்கள் அவ்வப்போது பூமியில் விழுந்த வண்ணம் இருக்கின்றன.
No comments:
Post a Comment