கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி உட்பட பல பிரபலங்கள் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ’உத்தம வில்லன்’. வரும் மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை கமலின் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து கமல் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் என்பதாலும், மறைந்த இயக்குநர் பாலசந்தர் நடித்துள்ள கடைசி படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே விஸ்ரூபம் எடுத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கும் இப்படத்திற்கான முன்பதிவு இன்று தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில திரையரங்குகள் நேற்றே முன்பதிவைத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதால், முக்கிய திரையரங்குகளின் ஆன்லைன் முன்பதிவில் இப்போதே ‘எண்ட் கார்டு’ போட்டுவிட்டார்கள்.
குறிப்பாக சென்னையில் சங்கம், அபிராமி, தேவி, சத்யம், கமலா, ஏஜிஎஸ், உட்லாண்ட்ஸ் போன்ற திரையரங்குகளில் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் 95% சதவிகிதம் முடிந்துவிட்டன. மே 1ஆம் தேதி விடுமுறை என்பதால் பல திரையரங்குகளில் காலை சிறப்புக்காட்சியும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கான முன்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment