Thursday, 30 April 2015

இடிபாடுகளுக்குள் சிக்கி 5 நாள் போராட்டம்: உயிர்பிழைக்க சிறுநீரை அருந்திய அவலம்


நேபாளத்தை தாக்கிய 7.8 ரிக்டர் பூகம்பத்தில் இடிந்து விழுந்த கட்டடமொன்றின் இடிபாடுகளின் கீழிருந்து 82 மணி நேரம் கழித்து இளைஞர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
ரிஷி கனால் (27 வயது) என்ற மேற்படி இளைஞர் கடந்த சனிக்கிழமை பூகம்பம் தாக்கியபோது விருந்தினர் இல்லமொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த அந்த விருந்தினர் இல்ல இடிபாடுகளின் கீழ் இரு நாட்களாக சிக்கியிருந்த அவரை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.
அந்தக் குழுவினர் ஆரம்ப கட்டமாக அவருக்கு இடிபாடுகளின் வழியாக நீர் மற்றும் ஆக்ஸிஜனை விநியோகித்த பின்னர் 6 மணி நேரம் போராடி இடிபாடுகளை அகற்றி அவரை பாதுகாப்பாக மீட்டனர். அவர் தனது சிறுநீரை அருந்தியே உயிர் வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அவருடன் மேற்படி இடிபாடுகளின் கீழிருந்து மீட்கப்பட்ட மற்றொருவர் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன் இடிபாடுகளின் கீழ் 50 மணி நேரமாக சிக்கியிருந்த நிலையில் பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தப் பெண் இடிந்து விழுந்த இரு மரப்பாளங்களுக்கிடையில் சிக்கியிருந்துள்ளார். அவரை இந்திய தேசிய விபத்து மீட்புப் படையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போது சுய உணர்வுடன் இருந்த அந்தப் பெண் சிகிச்சைக்காக காத்மண்டு நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மேற்படி பூகம்பத்தில் சிக்கி பலியானவர்கள் தொகை 5,057 ஆக உயர்ந்துள்ளதுடன் 10,900 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment