கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் கமலின் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’உத்தம வில்லன்’. வரும் மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நேற்று வரை இப்படம் வெளிவருமா? வராதா என்று சந்தேகம் திரையுலகில் நிலவியது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் லிங்குசாமி ஏடாகூடமாக கடனை வாங்கி பல படங்களை தயாரிக்க ஆரம்பித்ததுதான் பிரச்சனைக்குக் காரணம். இன்னொரு பக்கம் கமல் வேறு படத்தின் பட்ஜெட்டை சகட்டுமேனிக்கு அதிகரித்துவிட்டார்.
இதனால் மே 1 ஆம் தேதி உத்தமவில்லன் வெளியாகாது என்ற நிலையே இருந்தது. இந்தப் பிரச்சனையிலிருந்து மீண்டு உத்தமவில்லன் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்று தெரியாமல் லிங்குசாமி தவித்துக்கொண்டிருந்தபோது சரியான நேரத்தில் கைகொடுத்தார் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா. உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்வது என் பொறுப்பு என்று களத்தில் இறங்கினார்.
தமிழகம் முழுக்க படத்தை வெளியிடும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் உத்தமவில்லன் வெளியாகிறது. உலகம் முழுவதும் 1500 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாக உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துவிட்டதாம். பல திரையரங்குகளில் ஆன்லைன் வழி முன்பதிவிலேயே கணிசமான எண்ணிக்கையில் டிக்கெட்டுகள் விற்றுள்ளன.
குறிப்பாக சென்னையில் உள்ள ஐநாக்ஸ், சத்யம், அபிராமி, தேவி, சங்கம், கமலா, ஏஜிஎஸ், உட்லாண்ட்ஸ் போன்ற முக்கிய திரையரங்குகளில் முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
மே 1ஆம் தேதி விடுமுறை தினம் என்பதால் பல திரையரங்குகளில் அதிகாலை தொடங்கி காலை நேரத்து சிறப்புக்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த சிறப்புக்காட்சிகளுக்கான டிக்கெட் விலை 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment