நேபாளத்தில் எவரெஸ்ட் பிராந்தியத்தை சனிக்கிழமை பூமியதிர்ச்சி தாக்கிய போது அந்தப் பிராந்தியத்தில் முகாமிட்டிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த புதிதாக திருமண பந்தத்தில் இணைந்த ஜோடி ஒன்று பெரும் போராட்டத்தின் மத்தியில் உயிர் தப்பியுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு லண்டனில் நொற்றிங் ஹில் எனும் இடத்தைச் சேர்ந்த சாம் (28 வயது) மற்றும் அலெக் சாண்ட்ரா சப்பற்றி (28 வயது) ஆகிய மேற்படி புதுமணத் தம்பதி தேனிலவைக் கழிக்க எவரெஸ்ட் பிராந்தியத்திற்கு சுற்றுலா சென்ற சமயத்திலேயே இந்த பூமியதிர்ச்சி பேரழிவு இடம்பெற்றுள்ளது. பூமியதிர்ச்சியால் பனிப்பாறைகள் சரிந்து விழுந்த போது சாமும் சப்பற்றியும் பனிப்பாறைகள் மீது ஏறுவதற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு கோடரி உபகரணத்தில் தொங்கியவாறு இருந்துள்ளனர்.
பல கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் திருமண வாழ்வை ஆரம்பித்துள்ள தாம், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு முன்னரே ஒன்றாக மரணத்தைத் தழுவப் போவதை நினைத்து பீதியுடன் அவர்கள் இருவரும் கோடரி உபகரணத்தில் தொங்கிக் கொண்டிருக்க அவர்களுக்கு வெகு அண்மையில் பனிப்பாறைகள் உருண்டு சென்றுள்ளன. இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் அதிசயிக்கத்தக்க வகையில் எந்தவித பாதிப்புமின்றி உயிர் பிழைத்துள்ளனர்.
மேற்படி அனுபவம் குறித்து அவர்கள் இருவரும் இணைந்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தாம் இருவரும் இந்த மாத ஆரம்பத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் தமது தேனிலவின் அங்கமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஜோடி கடந்த ஆண்டும் மேற்படி சிகரத்தில் ஏறுவதற்கு முதல் தடவையாக முயன்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதி சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி தாக்கிய போது அந்த ஜோடி தரையிலிருந்து 19,900 அடி உயரத்தில் முகாமிட்டிருந்துள்ளது.
“தரை கடுமையாக நடுங்க ஆரம்பித்தது. பனிப்பாறைகள் எம்மை நோக்கி உருண்டு வருவதைக் கண்டோம். நாம் எமது கூடாரத்திற்கு பின்னாலிருந்த பகுதியில் ஒதுங்கி பனிக் கோடரிகளை பற்றியவாறு தொங்கினோம் என சாமும் சப்பற்றியும் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் பிறிஸ்டலைச் சேர்ந்த டான் மஸுர் தலைமையிலான 11 மலை ஏறுபவர்களை உள்ளடக்கிய குழுவில் அங்கம் வகித்தே இந்த சிகரத்தில் ஏறும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
7.8 ரிக்டர் பூமியதிர்ச்சியையடுத்து ஞாயிற்றுக்கிழமை தாக்கிய 6.7 ரிச்டர் பூமியதிர்ச்சியிலும் மேற்படி ஜோடியை உள்ளடக்கிய குழுவினர் தங்கியிருந்த முகாம் பாதிப்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. பூமியதிர்ச்சிகளையடுத்து உருண்டு விழுந்த பனிப்பாறைகள் காரணமாக எவரெஸ்ட் சிகர பிராந்தியத்தில் சுமார் 30 மலை ஏறும் வீரர்கள் வெளியேற முடியாது சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் மீட்புக் குழுவினரை அனுப்ப அவர்களது உறவினர்கள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment