Thursday, 30 April 2015

20 தமிழர்கள் படுகொலை: சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியாது


ஆந்திர போலீஸாரால் 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் சி.பி.ஐ., விசாரணை செய்யப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஏப்ரல் 7ம் தேதி, ஆந்திர வனப்பகுதியில், 20 தமிழக கூலித் தொழிலாளர்கள், செம்மரம் கடத்தியதாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து மாறுபட்ட கருத்து வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே வேளை, இது குறித்து ஐதராபாத் ஐகோர்டில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராஜ்யசபாவில், இவ்விவகாரம் தொடர்பாக, தொடர்பாக, தமிழக எம்.பி.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தில் தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த தீர்மாணத்துக்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிக்க சென்ற போலீசாரை நூற்றுக்கணக்கான கடத்தல்காரர்கள் சூழ்ந்து கொண்டு கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கினர். இதையடுத்து தற்காப்புக்காக அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 20 பேர் பலியாகினர். இறந்தவர்களின் உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று சிலரின் உடல்கள் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது நீதிமன்றத்திடம் தான் தெரிவிக்க வேண்டும் என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார்.
இதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதால் தமிழகம் வேதனையில் உள்ளது. கடத்தல்காரர்களை பாதுகாக்க கூலி தொழிலாளர்களை கொன்றுள்ளனர். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
கனிமொழிக்கு ஆதரவாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறுகையில்,
தமிழர்கள் கொல்லப்பட்டது வருந்தக்கூடிய சம்பவம். என்கவுன்ட்டரை ஏன் நடத்தினோம் என்று போலீசார் தெரிவித்துள்ளது நம்பும் வகையில் இல்லை. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அல்லது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இவர்களைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில்,
ஆந்திர அரசு தெரிவித்த தகவலை உள்துறை அமைச்சர் நம்மிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி புலனாய்வுத் துறை அளித்த அறிக்கையின் விவரத்தை தெரிவிக்க வேண்டும். கூட்டணி கட்சி அரசு என்ற முறையில் தான் ஆந்திர அரசை மத்திய அரசு பார்க்கிறது. தமிழர்கள் கொலை விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இவ்வாதங்களைக் கேட்ட ராஜ்நாத் சிங் இறுதியாக,
20 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், நீதி விசாரணை வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சிபிஐ விசாரணை நடத்த அந்த மாநில அரசு கோரிக்கை விடுக்க வேண்டும். ஆந்திரா அரசு கோரிக்கை விடுக்காததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. விசாரணை கமிஷன் அமைக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டால் நாங்கள் நிச்சயம் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment