ஏப்ரல் 29
ஓவியர் ரவிவர்மா பிறந்த தினம்!!!
உலகப்புகழ் பெற்ற ஓவியர்களுள் ஒருவர் நம் பாரத தேசத்தைச் சேர்ந்த ராஜா ரவிவர்மா. இவரது ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. குறிப்பாகப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படும் பெண்களை மிகத் துல்லியமாக புகைப்படம் போல் வடிப்பதில் இவர் வல்லவர். ஒரு அழகிய பெண்ணை வர்ணிக்கையில் ரவிவர்மாவின் சித்திரம்போல் இருக்கிறாள் என்று பலர் கூறுவதுண்டு.
கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் உமாம்பா தம்புராட்டி, நீலகண்டன் பட்டாதிரிபாதி எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக 1848ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிறந்தார் ரவிவர்மா. இளம் வயதுமுதலே ஓவியக்கலையில் திறமையுடன் விளங்கிய ரவிவர்மா திருவாங்கூர் ஆயில்யம் திருநாள் மஹாராஜாவின் ஆதரவைத் தன் 14ஆம் வயதிலேயே பெற்று அரண்மனை ஆஸ்தான ஓவியராயிருந்த ராமஸ்வாமி நாயுடு என்பவரிடம் ஓவியம் கற்றுக்கொண்டார்.
இதன்பின்னர் அவர் தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய ஓவியரிடம் "ஆயில் பைன்டிங்" (oil painting) எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணக்கலவை கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றார். ஐரோப்பாவினரின் ஓவியங்களில் காணப்பட்ட சக்தியும், தெளிந்த பாவமும், அவை இந்திய ஓவியக்கலையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்த விதமும் ரவிவர்மாவை மிகவும் கவர்ந்தன.
ரவிவர்மா நல்ல படிப்பறிவும், தன் வார்த்தைகளில் கவியோவியம் படைக்கும் புலமையும் மிக்கவர். அவர் எந்த நாட்டுக்கும் அரசரில்லாவிடினும் அவரது இத்தகு திறமைகளினால் ராஜா ரவிவர்மா என்றழைக்கப்பட்டார்.
1873ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த ஒரு ஓவியப் போட்டியில் ரவிவர்மா முதல் பரிசுபெற்றதும் அவரது புகழ் எங்கும் பரவியது. ஹிந்து மதத்தினர் வணங்கும் பெண் தெய்வங்களையும் சேலை கட்டிய தென்னிந்தியப் பெண்களையும் அவர் அடிக்கடித் தன் ஓவியங்களுக்கு கருப்பொருளாக எடுத்துக்கொண்டு அவற்றை அழகுடன் ஓவியங்களில் தீட்டினார். மஹாபாரதத்தில் உபகதைகளாகக் கூறப்படும் துஷ்யந்தன் சகுந்தலை, நளன் தமயந்தி கதைகளில் வரும் காட்சிகளை மையமாகக்கொண்டு அவர் வரைந்த ஓவியங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. புராணக் கதாபாத்திரங்களை அவர் வரைந்த விதம் அக்கதாபாத்திரங்கள் இந்தியர்கள் மனதில் ஆழமான இடம்பிடிக்க ஏதுவானது.
ரவிவர்மா இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு பல ஸ்தலங்களைப் பார்வையிட்டு, பின்னர் தான் கண்டவற்றை வண்ண ஓவியங்களாக வடித்தார். ஒரு புகழ்பெற்ற ஓவியாரக வெற்றிகரமாகத் தன் வாழ்நாளில் திகழ்ந்த ராஜா ரவிவர்மா 1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தான் பிறந்த ஊரான கிளிமனூரிலேயே தன் 58ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1891 – பாரதிதாசன் பிறந்த தினம்.
1945 – ஹிட்லர் தனது நீண்டநாள் காதலியான, ஏவா பிரௌனை ரகசியம் திருமணம் புரிந்தார்.
1946 - ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஹிடெக்கி டோஜோ மற்றும் 28 முன்னாள் தலைவர்கள் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர்.
2005 - 29 ஆண்டு கால முற்றுகையின் பின்னர் லெபனானில் இருந்து சிரியா வெளியேறியது.
இன்றைய சிறப்பு தினம்:
ஜப்பான் தேசிய தினம்.
உலக நடன தினம்.
No comments:
Post a Comment