Tuesday, 28 April 2015

எளிதில் யாராலும் முறியடிக்க முடியாத சச்சினின் ஏழு சாதனைகள்!!!


சச்சின் டெண்டுல்கர், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக வலம்வந்தவர். அவர் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்ட பிறகும் கூட இவரின் சாதனைகள் இன்றும் அதே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருக்கின்றது.
இவரது கிரிக்கெட் வரலாற்றில் 463 ஒரு நாள் போட்டிகளையும், 200 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் இவர் நிகழ்த்திய சாதனைகளை இன்றளவும் எவரும் முறியடித்ததில்லை. எதிர்காலத்தில் முறியடிப்பதும் கடினம் என்றே கூறலாம்.
எனினும், இவரின் ஒரு சில சாதனைகளை விராட் கோலி மற்றும் ஆலஸ்டர் குக் போன்றவர்கள் முறியடிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
சச்சின் தன் வசம் வைத்துள்ள சாதனைகளைப் பார்க்கலாம்!!!
சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள்:
சச்சின் டெண்டுல்கர் 2012-ல் நடைபெற்ற ஆசியகோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக தனது 100வது சதத்தை அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெயரை பெற்றார். இதில் 51 சதங்கள் டெஸ்ட் போட்டிகளிலும், 49 சதங்கள் ஒரு நாள் போட்டிகளிலும் அடிக்கப்பட்டதாகும். இவருக்கு அடுத்து 71 சதங்கள் அடித்து ரிக்கி பாண்டிங் அதிக சதத்தை அடித்த வீரர்கள் பட்டியலில் இருக்கின்றார்.
அதிக ரன்களை அடித்த வீரர்:
சச்சின் டெண்டுல்கர் தனது ஒட்டு மொத்த கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி சேர்த்த ரன்களானது, 34357 ரன்கள் ஆகும். இது வரை எவரும் இதனை முறியடிக்க வில்லை. எனினும், ஆலஸ்டர் குக் மற்றும் விராட் கோலி இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஒரு நாள் தொடரில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்:
சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 62 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இவருக்கு அடுத்து சனத் ஜெயசூர்யா 48 முறை வென்றுள்ளார். இவர்களுக்கு அடுத்து என்று பார்த்தால் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. காலிஸ், பாண்டிங் மற்றும் அஃப்ரிடி மூவரும் 32 முறை வென்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் 15000+ ரன்களுடன் 150+ விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர்:
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 15000-க்கும் அதிகமான ரன்களை குவித்த ஒரே வீரர் சச்சின் தான். அதோடு, 154 விக்கெட்டுகளையும் தனது ஒரு நாள் தொடர் வரலாற்றில் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு பகுதி நேர பவுலர் இத்தனை விக்கெட்டுகளை எடுப்பது அசாதரணமான ஒரு விஷயம்.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்:
உலகக் கோப்பை தொடரில் 2000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் சச்சின் தான். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடியதுடன் அவரின் 6 உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 2278 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல 2003ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் மட்டும் இவர் 673 ரன்கள் எடுத்துள்ளார். இதுவே ஒரு தொடரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ரன்னாகும்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 4ஆம் நிலை ஆட்டக்காரர்:
சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வில் பல நிலைகளில் ஆடி வந்துள்ளார். துவக்க ஆட்டக்காரர் மட்டுமின்றி, டெஸ்ட் தொடர்களில் 4வது ஆட்டக்காரராகவும் இறங்கியுள்ளார். 4வது ஆட்டக்காரராக மட்டும் சச்சின் அடித்த ரன்களின் எண்ணிக்கை 13492 ஆகும். இவரை அடுத்து மஹீலா ஜெயவர்த்தனே 9509 ரன்களும், ராஸ் டெய்லர் 3826 ரன்களும் அடித்துள்ளனர்.
ஒரு நாள் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக ரன் எடுத்த வீரர்:
16 வருடங்களாக முறியடிக்கப் படாத ஒரே சாதனை இது தான். 1998ஆம் ஆண்டில் மட்டும் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டி தொடரின் ரன்களானது, 1894 ரன்கள் ஆகும். எனினும், அதற்கு அடுத்த வருடமே கங்குலி மற்றும் டிராவிட் இருவரும் இந்த ரன்களை நெருங்கி வந்தனர். ஆனால் அவர்களால் முறியடிக்க முடியவில்லை. 2000ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு வீரரும், ஒரே ஆண்டில் 1500-ஐத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment