Wednesday, 29 April 2015

இடிபாடுகளுக்கு இடையே உயிருக்காக 24 மணி நேரம் போராடிய நபர்..!


நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.8 ரிக்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி பலியானவர்கள் தொகை 2,500 பேரையும் தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.
இந்நிலையில் தனது வீட்டின் இடிபாடுகளின் குறுகிய இடை வெளியில் தனது நண்பனின் உயிரற்ற உடலுடன் 24 மணி நேரமாக புதையுண்டிருந்த நபரொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் ஒரு முழு இரவை அசைய முடியாத நிலையில் மேற்படி குறுகிய இடைவெளியில் கழித்துள்ளார். குறிப்பிட்ட நபர் காத்மண்டு பள்ளத்தாக்கில் சுயம்பு பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் தனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.
இதனையடுத்து அவர்கள் இருவரும் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளின் கீழ் புதையுண்டனர். இந்த சம்பவத்தில் அந்த நபரின் நண்பர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் அந்நபர், கன்னத்தோடு கன்னம் ஒட்டிய நிலையில் இருந்த நண்பனின் சடலத்துடன் இருள் சூழ்ந்த மூச்சுத் திணற வைக்கும் குறுகிய இடைவெளியில் உடல் காயங்களால் ஏற்பட்ட கடும் வலியையும் தாங்கிக் கொண்டு 24 மணி நேரத்தை கழித்துள்ளார்.
தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மீட்புப் பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை அந்நபரை மீட்டுள்ளனர். அவர் மீட்கப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சர்வ தேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment