Thursday, 30 April 2015

கிரீடம், ஃபேஸ்புக்கால் ஏற்பட்ட பிரச்சனை: வழக்கு தொடர்ந்த கனடா அழகுராணி.!


கனடாவைச் சேர்ந்த முன்னாள் அழகுராணியான தமரா ஜேமுரோவிக், அழகுராணி போட்டியொன்றின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் கனடா அழகுராணி போட்டியில் இரண்டாமிடம் பெற்றவர் தமரா ஜேமுரோவிக்.
ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த அவர் 2014 மிஸ் கனடா பேர்பெக்ட் அழகுராணி போட்டியிலும் அழகு ராணியாக தேர்வுசெய்யப்பட்டு முடிசூட்டப்பட்டார். இந்நிலையில், மிஸ் வேர்ல்ட் கனடா 2013 போட்டியில் தனக்குரிய பரிசுகள் வழங்கப்படவில்லை எனக் கூறி அப்போட்டி ஏற்பாட்டாளரான ஐகே லால்ஜிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ்விருவருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் இழுபறிகளைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மிஸ் வேர்ல்ட் கனடா 2013 கனடா போட்டியில் இரண்டாமிடம் பெற்றமைக்கான கிரீடம் மற்றும் இவ்வெற்றிக்கான பரிசாக வழங்கப்பட வேண்டிய 25,000 டாலர் பரிசுப் பணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு உல்லாசப் பயணம் சென்று திரும்புவதற்கான வசதிகள் ஆகியன தனக்கு கிடைக்கவில்லை என தமரா கூறுகிறார். அத்துடன் இப்போட்டி தொடர்பான பேஸ்புக் பக்கத்தையும் தான் பயன்படுத்த முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் தொடர்புகொள்ளமுடிய வில்லை எனவும் 21 வயதான தமரா தெரிவித்துள்ளார்.
இரண்டாமிடம் பெற்றமைக்கான கிரீடமானது தான் பங்குபற்றும் ஒவ்வொரு உத்தியோகபூர்வ நிகழ்விலும் அணிந்திருக்கப்பட வேண்டியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், தமரா ஜேமுரோவிக் மிஸ் வேர்ல்ட் கனடா அழகுராணி போட்டியாளர்களுக்கான உடன்படிக்கைகளை மீறியுள்ளார் என இப்போட்டி ஏற்பாட்டாளரான லால்ஜி குற்றம் சுமத்துகிறார். 2014 மே மாதம் வரை வேறு அழகுராணி போட்டிகளில் பங்குபற்றுவதில்லை என்ற உடன்படிக்கையில் தமரா கையெழுத்திட்டிருந்தார்.
ஆனால், அந்த உடன்படிக்கையை மீறி அவர் மிஸ் கனடா பேர்பெக்ட் அழகுராணி போட்டியில் பங்குபற்றியுள்ளார் என லால்ஜி கூறுகிறார். மிஸ் வேர்ல்ட் கனடா அழகுராணி போட்டியாளர்கள் சகிதம் பங்குபற்ற வேண்டிய 23 நிதி திரட்டல் நிகழ்வுகளிலும் தமரா பங்குபற்றத் தவறினார் எனவும் லால்ஜி தெரிவித்துள்ளார். மிஸ் கனடா போட்டியில் இரண்டாமிடம் பெற்றமைக்காக தமராவுக்கு அணிவிக்கப்பட்ட பட்டியை திருப்பிக்கொடுக்குமாறும் லால்ஜி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், தான் மிஸ் கனடா பேர்பெக்ட் போட்டியில் பங்குபற்றுவதை லால்ஜி அப்போது அறிந்திருந்தார் என தமரா தெரிவித்துள்ளார். மிஸ் வேர்லட் கனடா போட்டியில் பரிசுபெற்ற மற்றொரு போட்டியாளர், மிஸ் ஏர்த் (பூமி அழகுராணி) போட்டியில் பங்குபற்றி அது தொடர்பான விபரங்களை எவ்வித தடையுமின்றி வெளியிட்டுக்கொண்டிருந்தார் எனவும் தமரா கூறுகிறார்.

No comments:

Post a Comment