பீகாரில், நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களை அடையாளம் காண அவர்களது நெற்றியில் ‘நிலநடுக்கம்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கங்களால் இதுவரை சுமார் 5000 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட இந்நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் தென் பகுதி வரை உணரப்பட்டது.
வட இந்தியாவில் இதன் தாக்கம் குறிப்பிடப்படும் படியாக இருந்தது. பீகார், லக்னோ, உத்திர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி, பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் (டிஎம்சிஎச்) சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளிடமிருந்து, பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக, மருத்துவை நிர்வாகம் அவர்களது நெற்றியில் ‘நிலநடுக்கம்’ எழுதப்பட்ட பிரசுரத்தை ஒட்டியது.
இந்த தகவலறிந்த உள்ளூர் தொலைகாட்சி நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நோயாளிகளின் புகைப்படங்களை ஒளிபரப்பியது. இதனை அடுத்து இந்த விவகாரம் பெரும், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்தே ஸ்டிக்கர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தர்பங்கா மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் வைத்யநாத் சஹானி, டிஎம்சிஎச் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார்.
இந்த சந்திப்பை அடுத்து வைத்யநாத் சஹானி, “இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்”, என்று கூறினார். மேலும், இச்சம்பவத்துக்கு டிஎம்சிஎச் கண்காணிப்பாளர்ஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் மட்டும் நிலநடுக்கத்துக்கு இதுவரை 58 பேர் பலியாகி உள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ள மேற்கு சம்பரன், சித்தமர்ஹி உள்ளிட்ட மாவட்டங் களில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment