Thursday, 23 April 2015

கங்காரு - விமர்சனம்…!


அண்ணன் தங்கைப் பாசத்தை மையமாக வைத்து பாசமலர், முள்ளும்மலரும், என்தங்கைகல்யாணி உட்பட எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இப்படி ஒரு கொடுமையான பாசத்தை இயக்குநர் சாமியால் மட்டும்தான் காட்டமுடியும்.
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த அண்ணன் தங்கை. தங்கையைத் தூக்கிக்கொண்டு வேறு ஊருக்கு வந்து வேலை செய்து காப்பாற்றுகிறான் அண்ணன். தங்கை வளர்ந்து ஆளானதும் அவளுக்குக் காதல் வருகிறது. காதலனையே மணமகனாகப் பேசிமுடிக்கிறார் அண்ணன். ஆனால் திடீரென காதலன் இறந்துவிட திருமணம் தடைபடுகிறது. அதன்பின் இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமணநிச்சயம் நடக்கிறது. நிச்சயத்துக்குப் பிறகு அந்த மாப்பிள்ளையும் இறந்துபோகிறார்.
மூன்றாவதாக ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்துவிடுகிறார்கள். அந்த மாப்பிள்ளையையும் கொலை செய்ய முயற்சி நடக்கிறது. அதன்பின்னர்தான் ஏற்கெனவே இறந்தவர்களும் விபத்தில் இறக்கவில்லை கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. யார் அந்தக்கொலைகளைச் செய்தார்கள் என்பதை விளக்குவதுதான் படம்.
நாயகன் அர்ஜூனா முரடன் என்று முடிவு செய்துவிட்டதால் எந்நேரமும் விறைப்பாகவே அலைகிறார். கடைசிவரை அவர் இயல்பாகவே இல்லை. அதற்குக் கடைசியில் மருத்துவரீதியான ஒரு விளக்கம் வேறு சொல்லியிருக்கிறார்கள். இப்போதெல்லாம் இப்படி ஏதாவதொரு நோயின் பெயரைச் சொன்னாலே மக்கள் சிரிக்கத்தொடங்கிவிடுகிறார்கள் என்பதை உணராமல் கதை எழுதியிருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்திலேயே கங்காரு என்று சொன்னவனைப் போட்டு அடித்துத்துவைக்கிறார். அது எதனால்? என்று கடைசிவரை புரியவேயில்லை.
இத்தனைக்கும் கங்காரு என்பது உன்னைப் பெருமைப்படுத்துவதுதான் என்று விளக்கம் வேறு சொல்லியிருக்கிறார்கள். தேநீர்க்கடை வைத்திருப்பவர் தினமும் சாராயம் குடிக்கிறார். அதுவும் தங்கையே ஊற்றிக்கொடுக்கிறார் என்றெல்லாம் காட்சிகள் வைத்திருப்பது எதற்கு? தங்கையாக நடித்திருக்கும் பிரியங்கா, தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். படம் முழுவதும் வருகிற தம்பிராமய்யாவும் தனக்கான வேடத்தைச் சரியாகச் செய்திருக்கிறார். நாயகன் அர்ஜூனாவை ஒருதலையாகக் காதலிக்கிற வேடத்தில் வர்ஷா அஸ்வதி நடித்திருக்கிறார்.
சந்தோசமாக இருக்கவேண்டிய காட்சிகளில்கூட எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கிறார். படத்தில் வருகிற காவல்துறைஅதிகாரி வேடத்தில் இயக்குநர் சாமியே நடித்திருக்கிறார். மிகவும் இயல்பாக இருக்கிறது. கலாபவன்மணி மற்றும் அவருடைய கூட்டாளிகள் எல்லாம் நடக்கும் நிகழ்வுகளுக்கு அவர்கள்தாம் காரணம் என்று படம் பார்க்கிறவர்கள் நினைக்கவேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். இது அரதப்பழசான உத்தி என்பதால் அது பலிக்கவில்லை.
பின்னணிப்பாடகர் சீனிவாஸ் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஸ்வேதாமோகன் பாடியுள்ள பேஞ்சாக்கா மழைத்துளிதான் மண்ணோடு பாடல் (திரைக்கதைக்குள் வலிந்து திணிக்கப்பட்டிருந்தாலும்) இவ்வாண்டின் சிறந்தபாடலாக இருக்கும். இயல்பான மனிதர்களைப் பாத்திரமாகப் படைக்க இயக்குநர் சாமிக்குத் தெரியவே தெரியாது என்பதை இந்தப்படத்திலும் காட்டியிருக்கிறார். காட்சிகளில் ஒழுங்கு இல்லாமல் அடுத்து ஒரு காட்சி வரவேண்டும் என்பதற்காகவே காட்சிகள் வருகிற மாதிரி இருக்கிறது.
கடைசியில் தங்கை பற்றி வைக்கப்பட்டிருக்கும் கதை பாசத்துக்கு வலுச்சேர்ப்பது போலில்லாமல் நாயகனின் நோய்க்கு வலுச்சேர்ப்பது போல் அமைந்துவிட்டது. அதனால் கடுமையான அந்தத் திருப்பம் படத்துக்கு உதவவில்லை. கங்காரு தன் குட்டியை குட்டியாக இருக்கும் வரைக்கும்தான் தூக்கிக்கொண்டு திரியும். வளர்ந்த பிறகு விட்டுவிடும். ஆனால் இந்தப்படத்தில் தங்கை வளர்ந்தபிறகும் தூக்கிக்கொண்டு திரிகிறார் நாயகன்.
இந்தப்படத்துக்கு அந்தப்பெயரை வைத்து அந்த விலங்கின் பெயரைக் கெடுத்துவிட்டார்கள்.

No comments:

Post a Comment