சார்லஸ் ஷபிக் கார்த்திகா ஆகிய மூவர் வாழ்க்கையில் நடக்கும் திடுக்கிடும் திருப்பங்களே இந்தப்படம். இவர்களில் சார்லஸும் கார்த்திகாவும் காதலர்கள். அவர்கள் காதலில் ஒரு சிக்கல் ஏற்படுகிற அதேநாளில் ஷபிக்கும் ஒரு பெரிய சிக்கலில் மாட்டுகிறார். கடைசியில் மூவருக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது. சார்லஸாக நடித்திருக்கும் ஷரண்குமார், எல்லாநேரங்களிலும் ஒரேமாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்.
நாயகி அடைபட்டுக்கிடக்கும் வணிகவளாகத்துக்குள் காவல்துறையினருடன் போகும்போதுகூட எவ்விதப்பரபரப்பும் இல்லாமல் தேமெவென்றிருக்கிறார். இந்தஇடத்தில்தான் விளக்கெரிந்தது என்று காவல்துறையிடம் சொல்வதுகூட இல்லை. படம் பார்க்கிறவர்கள் இப்படி மண்ணு மாதிரி இருக்கானே என்று வசைபாடுவது உறுதி. கார்திகாவாக நடித்திருக்கும் ஜெய்குஹைனி, தன் வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வில்லன்களிடம் சிக்கிக்கொண்டு போராடும் காட்சிகளிலும் நன்றாகச் செய்திருக்கிறார். ஆனால் அலுவலகக் கழிவறையில் வழுக்கி விழுந்து மயக்கமாவதும் அதை யாருமே கவனிக்கவில்லை என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லை. மயக்கம் தெளிந்து இரவு பதினோரு மணிக்கு எழுந்து வருகிறார். வருகிறவர், அந்தக்கட்டிடத்தின் தலைவாசல் வரை வருகிறார். அது பூட்டியிருக்கிறது. அவர்கள் அலுவலகத்தைப் பூட்டவே மாட்டார்களா? அதேபோல அவருடைய கைபேசி வேலைசெய்யாமல் போகலாம் அவ்வளவு பெரியஅலுவலகத்தில் ஒரு தோலைபேசிகூடவா இல்லாமல் போகும்.
அதிலிருந்து வெளியே யாரை வேண்டுமானாலும் நாயகி அழைத்திருக்கலாம். அதைவிடுத்து அவர் வில்லன்களிடம் மாட்டிக்கொண்டு போராடுகிறார் என்பது அபத்தமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி முதல்காட்சியிலேயே அவரைக் கட்டிப்போட்டுவைத்துவிடுவதாகக் காட்டிவிட்டு, இரண்டாம்பாதியில் அவரைத் துரத்திப் பிடித்துக்கட்டிப்போடுவதை பத்துநிமிடங்களுக்கு மேல் காட்டுவது ரசிகர்களைச் சலிப்படைய வைக்கும் செயல்.
ஷபிக்காக நடித்திருக்கும் மிஷால்நசிர், பாத்திரப்படைபிலும் நிறையக் குளறுபடிகள். அவர் கடத்தல்வேலைக்குப் போவதற்காக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இதுவரை ஆயிரம்முறை பார்த்துச் சலித்தவை. வில்லன்களின் மகிழுந்திலிருந்து தப்பிஓடுகிறவர் ஒடுகிற திசை, திரும்பவந்து சேருகிற இடம் ஆகியனவற்றைப் பார்க்கும்போது மடத்தனமாகத் தெரிகிறது. இயக்குநர்குழுவில் ஒருவருக்குக்கூடவா இது தெரியவில்லை.
வில்லன்களாக நடித்திருக்கும் விமல்ஆதித்யா, நாராயண் ஆகியோர் தங்களுடைய மிகைநடிப்பால் நம்மைச் சோதிக்கிறார்கள். அவர்கள் எதற்காக நிறுவனத்தில் பணம் திருடுகிறார்கள். அதனால் அவர்களுக்குக் கிடைக்கும் ,லாபம் என்ன என்பதெல்லாம் தெளிவாகச் சொல்லப்படாததால் குழப்பமாக இருக்கிறது. கடத்தல்வேலை செய்யும் முஸ்லிமாக நடித்திருக்கும் கிருஷ்ணாவிஸ்வநாதன் இயல்பாக நடித்திருக்கிறார்.
முதல்பாதியில் ஒவ்வொருவருடைய பாத்திரத்தையும் அறிமுகப்படுத்தவே பாதிநேரம் போய்விடுகிறது. அதன்பின்னர், சார்லஸ் கார்த்திகா காதல். அதில் எவ்வித அழுத்தமும் இல்லை. ரசனைக்குரிய காட்சிகளும் இல்லை. இரண்டாம்பாதி முழுக்க ஒரே வணிகவளாகத்துக்குள்ளேயே படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். ஒரு கட்டிடத்துக்குள் நடக்கும் அந்தக்கண்ணாமூச்சி விளையாட்டு ரசிக்கிற மாதிரி இல்லை.
திரும்பத் திரும்ப ஒரேகாட்சியைப் பார்ப்பது போன்ற எண்ணம்தான் வருகிறது. காவலாளியும் வில்லன்களின் கையாள் என்பதும் எதிர்பார்க்கிற விசயம்தான். மேலதிகாரியை வெறும் கைகளால் மூக்கையும் வாயையும் பொத்தியே கொன்றுவிடுகிற வில்லன்கள். நாயகியைக் கொல்லமுடியவில்லை என்பதும் நம் காதில் பூச்சுற்றுவது மட்டுமின்றி இயக்குநரே அவர் காதில் பூச்சுற்றிக்கொள்வது போலவே இருக்கிறது.
ஒளிப்பதிவு படத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது. சித்தார்த்மோகன் இசையில் பாடல்கள்பெரிதாக இல்லை. பின்னணிஇசையில் தாழ்வில்லை. புதுஇயக்குநர் சத்தியமூர்த்திசரவணன், எல்லோரும் யூகிக்கக்கூடிய சாதாரணகதையை எடுத்துக்கொண்டு அதை விறுவிறுப்புடன் சொல்வதாக நினைத்து தானும் ஏமாந்து நம்மையும் ஏமாற்றியிருக்கிறார்.
No comments:
Post a Comment