Friday, 20 March 2015

கூடிய சீக்கிரமே குஷ்புவுக்கு காங்கிரஸில் தலைவர் பதவி…??


தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து பின் அரசியலில் குதித்தவர் குஷ்பு. ஆரம்பத்தில், தி.மு.க.,வில் இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸில் இணைந்தார். தமிழ்க காங்கிரஸில் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் விலகியதால், இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
மேலும், ஈ அடித்துக் கொடிருந்த தமிழக காங்கிரஸ் கூட்டங்களுக்கு குஷ்புவால் கொஞ்சம் கூட்டமும் சேர்ந்தது. இதனால், தமிழக காங்கிரஸில் குஷ்பு ஒரு முக்கிய உறுப்பினராக உருவாகிவிட்டார். இதனால், தமிழக காங்கிரஸில் இருக்கும் மற்ற பெண் பிரமுகர்களுக்கு குஷ்பு மீது வெறுப்பு கிளம்பிவிட்டது.
சட்டசபை காங்கிரஸ் தலைவரான விஜயதாரணி வெளிப்படையாகவே குஷ்புவுக்கு மேலிடம் அதிகமாக இடம் கொடுப்பதாகக் கூறினார். ஆனால், இதை எல்லாம் தாண்டி குஷ்புவுக்கு, காங்கிரஸில் பதவி கிடைக்கப்போவதாக சில மாதங்களாகவே குசுகுசுவென பேச்சுகள் அங்கும் இங்கும் அடிபட்டு வந்தன.
இந்த கிசு கிசு பேச்சுக்கள் கூடிய சீக்கிரமே நிறைவேறிவிடும் என்பது போன்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் சாய்லெட்சுமியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இவரை அடுத்து யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை தற்பொது உருவாகியுள்ளது.
இந்த பதவிக்கு விஜயதாரணி, ஹசீனா சையத், ராணி வெங்கடேசன், டி. யசோதா, ஜோதிமணி என பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம், இந்த பதவிக்கு குஷ்புவை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் நேரடியாகவே கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஷ்பு வந்த பிறகு கட்சிக் கூட்டங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். அவரது பேச்சுக்கள் புத்திசாலித்தனமாக, சரியான முறையில் உள்ளன. மக்களைக் கவரும் வகையில் அவர் பேசுகிறார். எனவே அவரையே மகளிர் காங்கிரஸ் தலைவியாக்க வேண்டும் இவ்வாறு இளங்கோவன் மேலிடத்தில் ஓதியிருக்கிறாராம்.
கட்சி மேலிடமும் இந்த பரிந்துறையை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே குஷ்பு கூடிய விரைவிலேயே காங்கிரஸ் மகளிர் தலைவராக உலா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment