திருட்டி டிவிடிகளை ஒழிக்க இயக்குநர் சேரன் தான் இயக்கியிருந்த ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை c2h என்ற திட்டத்தின் கீழ் வெளியிட்டார். இந்த திட்டத்திற்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு இருந்தது.
மேலும் மற்ற இயக்குநர்கள் ஒப்புக்கொண்டால் அவர்கள் படத்தையும் இந்த திட்டத்தின் கீழ் வெளியிட தயார் என்று அறிக்கை விடுத்தார். இந்த நிலையில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மீறி, அந்த படத்தை வெளியிட்டுவிட்டார் என்று இயக்குநர் சேரன் மீது ஜெமினி நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜெமினி இன்டஸ்ட்ரிஸ் இமேஜிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ.மனோகர் பிரசாத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார். அதில், டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் பி.சேரன், ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை தயாரிப்பதற்காக எங்கள் நிறுவனத்திடம் இருந்து ரூ.2 கோடி கடன் பெற்றார். கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகே படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்து உத்தரவாதம் அளித்தார். ஆனால், எங்களுக்குத் தர வேண்டிய பணத்தை திருப்பித் தராமல், படம் வெளியாகும் தேதியை சேரன் அறிவித்தார்.
கடன் தொகையை வட்டியுடன் திருப்பித் தராமல் படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதை விசாரித்த நீதிமன்றம், கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல், திரைப்படத்தை வெளியிட கடந்த ஜனவரி 12-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால், கடந்த 7-ஆம் தேதி ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை டிவிடி மூலமாக சேரன் வெளியிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் படத்தை அவர் வெளியிட்டுள்ளார். எனவே, சேரன் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி மனுவுக்கு பதில் அளிக்குமாறு சேரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment