Tuesday, 24 March 2015

சிங்கப்பூரை செதுக்கிய சிற்பிக்கு சிங்கப்பூர் மக்கள் ஒரு வாரம் துக்கம்!!


சிங்கப்பூரை உருவாக்கியவரும் சுமார் 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தவருமான லீ குவான் யூ நேற்று அதிகாலை நிமோனியா நோயால் உயிரிழந்தார். சிங்கப்பூரின் தலை சிறந்த தலைவர் இறந்ததற்கு நாடு முழுவதும், 9 நாட்களுக்கு அனுசரிக்கப் படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லீ குவான் யூ 1923ம் ஆண்டு செப்டம்பர், 16ம் நாள் பிறந்தவர். இவரது மூதாதையர்கள் சீனாவிலிருந்து சிங்கப்பூர் வந்து குடியேறியவதாக அவரே குறிப்பிட்டுள்ளார். உலகத் தலைவர்கள் பலரைப் போல் இவரும் ஒரு வழக்கறிஞராகத் தன் வாழ்க்கையை தொடங்கினார்.
நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார். இந்த கட்சியின் சார்பில் 1959ஆம் பிரதமராக பதவியேற்றார். மலேசியாவில் சிதறிக் கிடந்த சிங்கப்பூரின் பகுதிகளை 1965ஆம் ஆண்டு ஒன்றிணைத்து நவீன சிங்கப்பூரை லீ குவான் யூ உருவாக்கினார்.
இவரது நிர்வாகம், சிறந்த பொருளாதார கொள்கை ஆகியவற்றால் இன்று சிங்கப்பூர் உலக வல்லரசுகளுக்கிடையில் காலூன்றியுள்ளது. நாட்டு மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், அனைத்து மக்களுக்கும் குடியிருப்புகள் போன்றவை கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்.
1959 முதல் 1990 வரை 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக சேவை செய்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக அப்பதவியை தன் மகனுக்கு விட்டுக் கொடுத்தார். இதனை அடுத்து 2004 முதல் 2011 வரை மதியுரை அமைச்சர் (Minister Mentor) என்று இவருக்காகவே உருவாக்கப்பட்ட அமைச்சர் பதவியில் இருந்தார்.
நவீன சிங்கப்பூரை உருவாக்கிய இவரை சிங்கப்பூர் மக்கள் சிங்கப்பூரின் சிற்பி என்றும் அழைக்கின்றனர். இவருக்கு கடந்த பிப்ரவரி 5ம் நாள் நிமோனியா நோயின் தாக்கம் அதிகரித்தது. இதனால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இவர் இறந்து விட்டதாக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால் அவை அனைத்தும் பொய் என சிங்கப்பூர் அரசு அறிவித்தது. இறுதியாக நேற்று அதிகாலையில், லீ குவான் யூ இறந்த செய்தியை அவரது மகன் தொலைகாட்சியில் அறிவித்தார்.
இந்த செய்தியால் சிங்கப்பூர் முழுவதும், துக்கத்தில் ஆழ்ந்தது. லீ குவான் யூ மறைவிற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். லீ குவான் யூக்கு இரங்கல் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”இலங்கை தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்களப் பேரினவாத அரசுக்கும் இனக்கொலை நடத்திய அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தவர் லீ குவான் யூ.” என்று குறிப்பிட்டார்.
மேலும், லீ குவான் யூவின் மறைவுக்கு ஒரு வாரம் அஞ்சலி செலுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 23, 24 ஆகிய நாட்களில், லீயின் உடல் அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டிலும், 25 முதல் 29 வரை நாடாளுமன்ற வளாகத்தில் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகவும் வைக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூர் மக்கள் மறைந்த தங்கள் தலைவருக்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட பொது இடங்களில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிங்கப்பூரில் தமிழை ஆட்சி மொழிகளுள் ஒன்றாக்கியதுடன், தமிழர்களுக்கு பொது உரிமைகள் வழங்கையதாலும், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜபக்ஷ அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும் இவருக்கு உலகத் தமிழர்களும் வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment