குறும்படங்களை இயக்கி கொண்டிருந்த கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படம் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்துடன் களம் இறங்கிய அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜிகர்ந்தாண்ட படத்தை இயக்கினார்.
இந்தப் படமும் தமிழ் சினிமாவை வேற ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றது. வெறும் இரண்டு படங்களை மட்டும் இயக்கி தமிழ் சினிமாவில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தினார் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் இவரும் இவருடைய நண்பர்களும் சேர்ந்து புது இயக்குநர்களுக்கும், நடிக்கும் திறமை உள்ளவர்களுக்கும் உதவும் வகையில், பொழுதுபோக்குத் துறையில் ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மூலம் முதல் குறும்படங்களின் தொகுப்பு ‘பென்ச் டாக்கீஸ் - தி பஸ்ட் பென்ச்’ நாளை வெளிவரவிருக்கிறது. அனில் கிருஷ்ணன், சாருகேஷ் சேகர், கோப்பகுமார், மோனேஷ், ரத்னகுமார் ஆர்.எம்., மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் என்ற ஆறு குறும்பட இயக்குநர்களால் ஆறு குறும்படங்கள் இயக்கப்பட்டு ஒரே படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கு தணிக்கை சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த குறும்படங்கள் நாளை கோயமுத்தூரில் எஸ்.பி.ஐ., சினிமாஸ் மற்றும் பிவிஆர் சினிமாஸ் திரையரங்குகளிலும், பெங்களூரு பி.வி.ஆர். சினிமாஸில் மார்ச் 13-ந் தேதியிலும் வெளியிடப்படுகின்றன. கலைத்துறையில் சாதனை முத்திரை பதிக்கவும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தவும் ‘பென்ச் டாக்கீஸ்’ நிறுவனம் முனைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறும்பட இயக்குநர்களுக்கு தனித்துவ அடையாளத்தை இது ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

No comments:
Post a Comment