டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை மையப்படுத்தி, பிபிசி சார்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படத்தை ஒளிபரப்ப இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் ஆவணப்படம் ஒளிபரப்பப் பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் நாள் இரவு 9:30 மணியளவில், டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து ஒரு இளம் பெண்ணை 6 மிருகங்கள் நாசம் செய்தன. அதோடு, அப்பெண்ணை உயிர் போகும் அளவிற்குத் தாக்கி சாலையில் வீசியது அந்த மிருகக் கூட்டம்.
இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மையப்படுத்தி பிபிசி நிறுவனம் சார்பில் ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார் இங்கிலாந்து பெண் தயாரிப்பாளர் லெஸ்லி உட்வின்.
சுமார் 2 வருடங்கள் பாடுபட்டு தயாரித்த இப்படத்திற்காக, இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி முகேஷ் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டார். இதில், குற்றவாளி பெண்கள் மீது குற்றம் சுமத்தி கருத்து வெளியிட்டார்.
இது இந்தியா முழுவதையும் கொந்தளிக்கச் செய்தது. லோக் சபாவிலும், ராஜ்யசபாவிலும் இது குறித்து விவாதிக்கப்பட்டன. பெண் எம்.பி.,க்கள் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதை அடுத்து பிபிசி நிறுவனம், இந்த ஆவணப்படத்தை வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிகாலை 3.30 மணியளவில் இந்தியாவின் மகள் என்ற இந்த ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் வெளிநாடுகளில் ஒளிபரப்பியுள்ளது.
இது குறித்து பிபிசி விளக்குகையில், நிர்பயாவின் பெற்றோரின் சம்மதத்துடன் தான் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. மேலும், இது குறித்து நிர்பயாவின் பெற்றோர் கூறுகையில், இந்த ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment