Thursday, 5 March 2015

நான் கேட்குறது எதையும் கொடுக்காத!! ஆனா தீர்ப்பு மட்டும் கேட்டு உயிரை எடு!!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இவ்வழக்கில் ஜெ., உள்ளிட்ட நால்வரின் இறுதி வாதங்கள் நிறைவடைந்துவிட்டன. மீதமிருப்பது அரசு தரப்பிலான இறுதி வாதம் மட்டுமே.
இதுவும் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இறுதி வாதம் முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விதியாம்.
எனவே இந்த மாத இறுதிக்குள், இந்த வழக்கு முழுவதுமாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த அரசு தரப்பு இறுதி வாதத்தில், நீதிபதியின் அனைத்து ஆதாரங்களுக்கும், அரசு வழக்கறிஞர் பவானி சிங், உடனே வைத்திருக்காததால் நீதிபதி ஆத்திரமடைந்தார்.
அவர்கள் இருவருக்கிடையிலான வாக்குவாதம் பின்வருமாறு:
அரசு வழக்கறிஞர் : வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இயக்குனர் மற்றும் பங்குதாரர்களாக உள்ள மெடோ ஆக்ரோ பாரம் மற்றும் ரிவர்வே ஆக்ரோ பாரம் ஆகிய நிறுவனங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலமும், நெல்லை மாவட்டம், திருவைகுண்டம் தாலுகா, மீராகுளம் மற்றும் சேரகுளம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர்.
மேலும் அந்த நிலம் வாங்குவதற்கான பணம் முதல் குற்றவாளியான ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகம் சேர்த்த பணத்தை பயன்படுத்தியுள்ளனர்.
நீதிபதி: நிலம் வாங்க முதல் குற்றவாளியின் பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது? நிலம் கொடுத்தவர்களுக்கு பணமாக கொடுக்கப்பட்டதா? அல்லது காசோலை, வங்கி வரையோலையாக கொடுக்கப்பட்டதா? அப்படி கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கொடுங்கள் என்றார்.
அரசு வழக்கறிஞர் : என்னிடம் ஆதாரமுள்ளது. அதை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்கிறேன்.
நீதிபதி : நான் கேட்கும் எந்த கேள்விக்கும் உடனடியாக பதிலளிக்காமல், தாமதம் செய்கிறீர்கள், எந்த குற்றத்திற்கும் சட்டப்படியான ஆதாரமும், சாட்சி இருந்தால் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும்? இதை புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
ஜெயலலிதா கடந்த 1971ம் ஆண்டு தன்னிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக வருமானவரித்துறையிடம் கணக்கு கொடுத்துள்ளார்.
அவருக்கு வழக்கு காலத்திற்கு முன் எவ்வளவு சொத்து இருந்தது? வழக்கு காலம் மட்டும் அவரது பெயரில் இருந்த சொத்து எவ்வளவு? என்ற விவரம் தாக்கல் செய்யும்படி பலமுறை நான் கேட்டும், இரு தரப்பும் தாக்கல் செய்யவில்லை!!
அதோடு, தேவையில்லாமல் சாட்சிகளின் வாக்குமூலத்தை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். முக்கிய சாட்சிகளை மட்டும் எடுத்து கூறுங்கள்.
இதைத் தொடர்ந்து வக்கீல் பவானிசிங் சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனம் தொடர்பான சாட்சியை படித்தார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி அரசியல் கட்சி தலைவர்கள் டி.வி.நிறுவனம் தொடங்குவது தவறா? அப்படி தவறு என்றால் அதற்கான காரணத்தை ஆதாரமாக கொடுங்கள் என்றார்.
அரசு வழக்கறிஞர் : நாங்கள் டி.வி.சேனல் தொடங்கியதாக குற்றம்சாட்டவில்லை. கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கியதாக மட்டுமே கூறியுள்ளோம் என்றார்.
நீதிபதி : இரண்டும் ஒன்று தான். ஜெயலலிதா உள்பட குற்றவாளிகள் தமிழகம், ஆந்திர மாநிலத்தில் நிலம் வாங்கியதாக கூறியுள்ளீர்கள். மும்பை, கொல்கத்தா மாநகரங்களில் ஏதாவது சொத்து வாங்கியுள்ளாரா?
அரசு வழக்கறிஞர் : இல்லை.
நீதிபதி : நான் கேட்கும் பல ஆவணங்களை கொடுக்கவில்லை. தனி நீதிமன்றத்திலும் இப்படி தான் செயல்பட்டீர்களா? போதிய ஆதாரங்களை பரிசீலிக்காமல் தனிநீதிமன்றம் சந்தேகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதா?
கம்பெனிகளை சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாகக் கூறுங்கள்.
இது குறித்து பவானி சிங் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் போதே, குறுக்கிட்ட
நீதிபதி: இந்திய ஊழல் தடுப்பு சட்டம் 1988, 13 (1) (இ) பிரிவின் கீழ் நாட்டில் எந்த மாநில முதல்வர்களோ அல்லது அமைச்சர்களோ வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்த வழக்கு தொடுத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?
அரசு வழக்கறிஞர் : இதற்கு முன் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்த மாயாவதி மீது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்தாக வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், போதிய சாட்சி, ஆதாரமில்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால், நாட்டில் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.
நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்திற்காக சந்தா மூலம் ரூ.14 கோடி திரட்டியதாக குற்றவாளிகள் தரப்பில் சொல்வது சட்ட விரோதமானது. சந்தா வசூலிக்க வேண்டுமானால் முறைப்படி இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும். அதை செய்யவில்லை.
மேலும் திரட்டிய பணத்திற்கான வருமான வரியை வழக்கு காலத்தில் செலுத்தியுள்ளனர். திருடன் ஒருவன் தான் திருடிய பணத்தை பாதுகாத்து கொள்வதற்காக வருமான வரி செலுத்தினால் ஏற்றுகொள்ள முடியுமா?
இதைத் தொடர்ந்து இன்றும் பவானி சிங்கின் இறுதி வாதம் தொடர்கிறது. இதற்கிடையில், தி.மு.க., பொருளாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. இந்த மனுவின் தீர்ப்பு அன்பழகனுக்கு சாதகமாக வழங்கப்பட்டால், சொத்து குவிப்பு வழக்கை அது பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment