108 வைஷ்ணவத்திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.
இத்தகைய பெருமைவாய்ந்த இத்திருத்தலத்தில் சுமார் 15 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ரங்கவிலாச மண்டபத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொய்சால மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிற்பக்கலை நுட்பங்களுடன் கூடிய வேணுகோபாலன் சன்னிதியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
(வீடியோ கீழே)
இந்நிலையில் கடந்த 20.3.2015 இரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது கோவில் முன்மண்டபத்தின் வடக்கு பகுதி சுவரில் இருந்த சிமெண்ட் கட்டுமானங்களில் ஒன்று அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது சுமார் 5 அடி அகலமும், 20 அடி நீளமும், 8 அடி உயரமும் கொண்ட பழமையான அறை இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து தகவல் அறிந்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறைகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அது பழங்காலத்தில் பொருட்கள் வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட அறை என கண்டறியப்பட்டது. அந்த அறையில் கல்லால் ஆன மூடப்பட்ட தடயம் தெரிந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதன் கீழே அதே அளவுள்ள மற்றொரு அறை இருப்பதும் தெரியவந்தது.
ஆயினும் 2 அறைகளிலும் பொருட்கள் எதுவும் இல்லை. இது குறித்து சென்னை அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பிறகே இவ்வறைகள் எதற்காக மூடப்பட்டது. யாரால் எப்போது கட்டப்பட்டது என்பது போன்ற விபரங்கள் தெரியவரும்.
(வீடியோ கீழே)
No comments:
Post a Comment