Friday, 24 April 2015

செம்மரக்கடத்தலில் சிக்கி தொடர்ந்து எஸ் ஆகும் நடிகை!! ஸ்கெட்சு போடும் போலீஸ்!!!


செம்மரக்கடத்தலில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நடிகை நீது அகர்வால் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
இவரைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். முதற்கட்டமாக அவரது வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி கொல்லப்பட்டனர். இதனால, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும், செம்மரக்கடத்தலில் ஈடுபடும் முக்கிய புள்ளிகளை விட்டுவிட்டு கூலித் தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் சுட்டுப் பொசுக்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதே வேளை, இது என்கவுண்டர் அல்ல திட்டமிடப்பட்ட படுகொலை என்ற சர்ச்சையும் நிலவி வருகிறது. இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், செம்மரக்கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதில் ஆந்திர போலீஸார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
செம்மரம் கடத்தல் தொடர்பில் சுமார் 61 கூலித் தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் அளித்த தகவல்களின்படி, செம்மர கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். சில தினங்களுக்கு முன், செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திரவைச் சேர்ந்த மஸ்தான் வலி அவரது சகோதரர் பாபாவலி ஆகியோரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.
மஸ்தான் வலியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், செம்மர கடத்தல் கும்பலுடன் நடிகை நீத்து அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, செம்மர கடத்தல் தொடர்பாக இவர்கள் 3 பேர் மீதும் கர்னூல் மாவட்டம் ருத்ராவரம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மஸ்தான் வலியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருவதாவது:
மஸ்தான் வலி சாதாரண எலுமிச்சை வியாபாரியாக இருந்தவர். திருப்பதிக்கு வந்தபோது, அவருக்கு செம்மர கடத்தல் புள்ளிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மஸ்தான் வலியிடம் பணப்புழக்கம் அதிகரித்து, சினிமா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டில் அவர் தயாரித்த ‘பிரேம பிரயாணம்’ என்ற தெலுங்கு படத்தில் நீத்து அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அதன்பிறகு, மஸ்தான் வலிக்கும் நீத்து அகர்வாலுக்கும் பழக்கம் அதிகரித்து அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்தி உள்ளனர். மேலும் நீத்து அகர்வாலுக்கு, மஸ்தான் வலி ரூ.35 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். சினிமா தயாரிப்பில் பெரிய அளவில் வெற்றிபெற முடியாததால் மஸ்தான் வலி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு அரசியலில் குதித்துள்ளார்.
மேலும், செம்மர கடத்தலில் கிடைத்த பணத்தை மஸ்தான் வலி, நீத்து அகர்வாலின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளார் என்றும், நீத்து அகர்வாலின் வங்கி கணக்கில் இருந்து பல கடத்தல்காரர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக, கடத்தல்காரன் சங்கர் நாயக்கிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து பெரும் தொகையை நீத்து அகர்வால் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நீது அகர்வால் குறித்த தகவல்கள் ஊடகங்களில் தீயாகப் பரவி வருகின்றன. இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகை நீத்து அகர்வால் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், அவர் செம்மரக் கடத்தலில் பதுக்கிய பணத்தை சேமித்து வைத்துள்ள வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.
வங்கிக் கணக்கை முடக்கியது தெரிந்தால் நீது எப்படியும் வெளி வரக்கூடும் என்பதாலேயே இப்படி செய்ததாக தெரிகிறது. மேலும், நீதுவை பெங்களூரு ஹைதராபாத் ஆகிய இரு இடங்களிலும் நீது அகர்வாலை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment