சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதை அடுத்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா இழந்த முதல்வர் பதவியை மீண்டும் பெற தகுதியுடையவரானார்.
அவரை மீண்டும் முதல்வராக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நேரத்தில் மிகச் சரியாக நடந்தன. நேற்று எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.,வின் சட்டபைத் தலைவராக ஒருமனதாக ஜெயலலிதா தேர்தெடுக்கப்பட்டார்.
உடனே, தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் தம் பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து புதிய அமைச்சரவையை அமைப்பதற்காக ஆளுநர் ரோசையா ஜெயலலிதாவை அழைத்தார். இதன்படி 28 புதிய அமைச்சர்களின் பட்டியலோடு ஜெயலலிதா ஆளுநர் ரோசையாவைச் சென்று சந்தித்தார்.
சந்தித்த கையோடு, தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு, தமிழகம் எங்கில் இருந்தும் வந்து திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களைச் சந்தித்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் புதிய அமைச்சர்கள் 28 பேரும், இன்று, மே 23, காலை 11 மணியளவில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக் கோள்வார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும், 5வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட சில மாநில முதல்வர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் பங்கேற்பர் என்று கூறப்பட்டது. குறிப்பாக ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அறிவிப்பின் படி இன்று காலை 11 மணியளவில் ஜெயலலிதா பதவியேற்பு விழா நடந்தது. ஆளுநர் ரோசையா ஜெயலலிதாவுக்கும், புதிய அமைச்சர்கள் 28 பேருக்கும், பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர்கள், 14 பேர், 14 பேராக இரு பிரிவுகளில் பதவியேற்றனர். அ.தி.மு.க.,வினர் ரொம்பி வழிந்த இவ்விழாவில் தமிழ்த் திரை உலக நட்சத்திரங்களான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா, செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, நடிகர் தியாகு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் குயிலி, உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இது போக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன், மதுரை ஆதினம் ஆகியோரும் வந்திருந்தனர். ஆனால், விழாவில் அறிவிக்கப்பட்ட படி, வெளி மாநில முதல்வர்களோ, குறிப்பிட்ட மத்திய அமைச்சர்களோ வரவில்லை. அவர்கள் அழைக்கப்படவில்லையா அல்லது அழைத்தும் வரவில்லையா என்பது தெரியவில்லை. எனினும், மத்திய அரசின் சார்பில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னன் வந்திருந்தார். பா.ஜ.க., தரப்பில், எச்.ராஜா, இல. கணேசன் ஆகியோர் வந்திருந்தனர்.

No comments:
Post a Comment