பேய்ப்பட வரிசையில் இன்னொரு வரவுதான் ‘டிமான்ட்டி காலனி’. அருள்நிதி ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கிறார்.
சமீபகாலமாக பேய் படங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. ஆனால் மற்ற படங்களில் இருந்து இந்த ‘டிமான்ட்டி காலனி’மாறுப்பட்டு இருக்கிறதா..? என்ன சொல்ல வருகிறது...?
சென்னைக் கடற்கரையோரம் உள்ள பட்டினப்பாக்கத்தில் வசிப்பவர் நாயகன் அருள்நிதி. அவரும் அவருடைய 3 நண்பர்களும் சேர்ந்து இரவு நேரம் ஒன்றில் பொழுதுபோகாமல் டிமான்ட்டி காலனியில் உள்ள பாழடைந்த பங்களா ஒன்றிற்கு விளையாட்டாக செல்கிறார்கள். பார்ப்பதற்கு அமானுஷ்யத் தோற்றமளிக்கும் அந்த பங்களாவிற்குள் சென்று வந்தபிறகு ஜோஷ்யரான எம்.எஸ்.பாஸ்கரை நான்கு பேரும் சென்று சந்திக்கிறார்கள்.
அவரிடம் ஜோதிடம் கேட்டுவிட்டுத் திரும்பும் வழியில், அருள்நிதிக்கு எம்.எஸ்.பாஸ்கர் போன் செய்து, அவரை திரும்பவும் தன்னை வந்து பார்க்குமாறு படபடப்புடன் பேசுகிறார். அருள்நிதிக்கும் அவருடைய குரலில் ஏதோ பீதி தெரிந்ததால் மீண்டும் அவரைப் பார்க்க தனியாகச் செல்கிறார்.
அங்கே போனால், எம்.எஸ்.பாஸ்கர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போகிறார் அருள்நிதி. எம்.எஸ்.பாஸ்கர் அருள்நிதியிடம் என்ன சொல்ல வந்தார்? எதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்? டிமான்ட்டி காலனி பங்களாவின் ஃப்ளாஷ்பேக் என்ன என்பதே படத்தின் கதைக்களம்.
உண்மையிலேயே ‘டிமான்ட்டி காலனி’ என்ற ஒரு இடத்தின் வரலாற்றுக் கதைகளைக் கேட்டு, அதனை ஒரு சிறு சம்பவமாக படத்தில் பதிவு செய்து, இதுவரை வெளிவந்துள்ள ஹாரர் படங்களின் பாதிப்பில் சில காட்சிகளை சேர்த்து ரசிகர்களை பயமுறுத்த முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஜய் ஞானமுத்து. இருந்தாலும் கொஞ்சம் குழப்பும் வகையில் திரைக்கதையை அமைத்து ரசிகர்களை குழப்பியிருக்கிறார்.
படத்திற்கு ஒளிப்பதிவு, பிண்ணனி இசையையும் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. எடிட்டிங், சவுன்ட் எஃபெக்ட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் போன்றவை தேவைக்கேற்ப பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஹீரோ அருள்நிதிக்கு பொருத்தமான கேரக்டர். முடிந்தளவுக்கு செய்திருக்கிறார். அவரைவிட அவருடைய நண்பர்களாக வருபவர்களின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். புதுமுகங்களாக இருந்தாலும் அந்தந்த கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
படத்தின் பலவீனம் என்றால் முதல்பாதி மெதுவாகவும், சுவாரஸ்யமில்லாமலும் நகர்கிறது. மொத்தத்தில் பெரிய அளவில் இந்த ‘டிமான்ட்டி காலனி’ ரசிகர்களை பயறுத்தவில்லையென்றாலும், வழக்கமான பேய்ப்படங்களாகப் பார்த்துப் போரடித்தவர்களுக்கு இப்படம் வித்தியாசமான உணர்வைத் தரலாம்.

No comments:
Post a Comment