உலக குத்துச்சண்டை விளையாட்டு வரலாற்றில் இதுவரை காலத்திலே ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் போட்டி அமெரிக்காவின் Floyd Mayweather மற்றும் பிலிப்பைன்ஸின் Manny Pacquiao ஆகியோருக்கிடையில் நாளையதினம் அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரிலுள்ள எம்ஜிஎம் கிராண்ட் அரங்கில் இடம்பெறவுள்ளது.
சிறுவயதில் கொடிய வறுமைக்கு முகங்கொடுத்தும் குத்துச்சண்டைத் திறமையால் உலக ஜாம்பவான்களில் ஒருவராக பரிணமிக்கின்ற மானி பக்கியோவிற்கும் தனது அபரிமிதமான ஆற்றல் மற்றும் செல்வச் செருக்கிற்காக பிரசித்தி பெற்றவரான ஃபுளொயிட் மேவெதருக்கும் இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமைக்கு வரலாற்றில் மிகச்சிறந்த இரு குத்துச்சண்டை வீரர்கள் ஒரே எடைப்பிரிவில் தமது ஆற்றலின் உச்சத்தில் சந்திக்கின்றமையே முக்கிய காரணமென்றால் மிகையல்ல.
38வயதுடைய ஃபுளொயிட் மேவெதர் 1996ம் ஆண்டில் தொழிற்சார் குத்துச்சண்டை வீரராக மாறியதன் பின்னர் இதுவரை பங்கேற்றுள்ள 47 போட்டிகளில் ஒருபோட்டியில் தானும் தோல்வியுற்றதில்லை. இந்த 47 போட்டிகளில் 26 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வெற்றிபெற்றுள்ள மேவெதர் இந்தக்காலப்பகுதியில் பல்வேறு எடைப்பிரிவுகளில் ஐந்து உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
1978ம் ஆண்டில் பிறந்த 36 வயதுடைய பக்கியோ 1995ம் ஆண்டில் தொழிற்சார் குத்துச்சண்டை வீரராக மாறியது முதலாக இதுவரையில் 64 போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன் அவற்றில் 57 வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார். இதில் 38 வெற்றிகள் நாக் அவுட் முறையில் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டியே உலக விளையாட்டு வரலாற்றில் மிகவும் பணக்காரப் போட்டியாக அமைந்துள்ளதுடன் இதில் பங்கேற்பதற்காக மேவெதருக்கும் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளதுடன் மானி பக்கியோவிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டியில் தோற்றால் தன்வசமுள்ள WBC மற்றும் WBA குத்துச்சண்டை பட்டங்களை மேவெதர் இழப்பதுடன் இதுவரை தோற்கடிக்கப்படாதவர் என்ற சாதனையையும் இழப்பார். மறுமுனையில் மானி பக்கியோ தோல்வியுற்றால் அவர் வசமுள்ள WBO குத்துச்சண்டை பட்டம் பறிபோகும்.
தனது 19வருடகால தொழில்சார் விளையாட்டு வரலாற்றில் 400மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான ( 52000 கோடி) சம்பாதித்துள்ள மேவெதர் தற்போது 295 மில்லியன் டாலர் (39000 கோடி) பெறுமதியான சொத்துக்களை தன்வசம் கொண்டுள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக உலகிலே அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
கடந்தாண்டில்மட்டும் 105மில்லியன் அமெரிக்க டாலர்களை இவர் சம்பாதித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ லயனல் மெஸி போன்ற வீரர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment