உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடந்து வரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான தகவல்களை காப்பதற்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
2ஜி ஸ்கேம் என்றழைக்கப்படும், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வின் முன் கடந்த மாதம் 20–ந்தேதி விசாரணைக்கு வந்போது, வழக்கின் நிலவர அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் சார்பில் மூத்த வக்கீல் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையின் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் அவர் வாசித்துக் காட்டினார். இந்த வாசிப்பில், பெயர் வெளியிடாமல், ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் வழக்குகளையும் சுமத்தி விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், கோரிடில் பெயர் வெளியிடப்படாத அந்நபர் குறித்த விபரங்கள் சில செய்தித் தாள்களில் வெளியாகின. (தி.மு.க., எம்.பி. கனிமொழி குறித்த விபரங்கள் இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாளில் வெளியானது)
இதைத் தொடர்ந்து, நேற்று 2ஜி தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு, ‘‘மூடி முத்திரையிடப்பட்ட உறையினுள் உள்ள அறிக்கையில் இடம்பெற்றிருக்கிற (ரகசிய தகவல்) ஒரு நபரின் பெயர், சில செய்தித்தாள்களில் வந்தது எப்படி?’’ என கேள்வி எழுப்பியது.
மேலும் தலைமை நீதிபதி தத்து, ‘‘கோர்ட்டு அதிகாரிகளிடம் இதுபற்றி நான் கேட்டேன். அவர்களில் ஒருவர் அழுதே விட்டார். எனவே எங்கள் தரப்பில் இது நிகழவில்லை. இந்த சம்பவம் கவலை அளிப்பதாக உள்ளது’’ என கூறினார். இதைக் கேட்டதும், தங்கள் தரப்பில் நடந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட கே.கே. வேணுகோபால், ‘‘இப்படி அடிக்கடி நடக்கிறது.
இது தொடர்பாக ஒரு விசாரணை நடத்தலாம். வழக்கும் பதிவு செய்யலாம். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை இனி தடுத்து நிறுத்த முடியும்’’ என்றார். இறுதியில் தலைமை நீதிபதி, ‘‘2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விவகாரங்களை விசாரிக்க ஏற்ற அமர்வு இது அல்ல. இதுபற்றி விசாரிக்க ஒரு சிறப்பு அமர்வு ஜூலை மாதம் 23–ந்தேதி அமைக்கப்படும்’’ என அறிவித்தார்.
No comments:
Post a Comment