கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில்இன்று வெளியாக இருந்த உத்தமவில்லன் திரைப்படத்தின் காலை காட்சிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. படத்தயாரிப்பாளருக்கும் பணம் கொடுத்த ஃபைனான்சியருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.
பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு அடுத்த காட்சிகள் திரையிடப்படுமா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திராவிலும் காலை கட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் காலையில் இருந்து கமல் படத்தை பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, உத்தம வில்லன் படப்பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில், தயாபரிப்பாளர், விநியோகஸ்தர்கள், ஃபைனான்சியர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உத்தம வில்லன் படத்தை வெளியிடக்கோரி ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கு முன் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், திருச்சியிலும் உத்தம வில்லன் படத்தை காண்பதற்காக இன்று காலை திருச்சி மேரிஸ் திரையரங்கம் முன்பும் ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், படம் வெளியாகாததை அடுத்து, ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.
திருச்சி ரம்பா தியேட்டர் முன்பும் காலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், 'படம் தற்போது வெளியாகவில்லை. பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும்' என ரசிகர்களிடம் திரையரங்கு நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். அதன்பிறகு, '3 மணிக்கு படம் வெளியாகும்' எனக் கூறியிருக்கின்றனர்.
இது, உத்தம வில்லன் படத்தை காண்பதற்காக ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்த ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்கள் திரையரங்கு வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. எப்பதாம்பா படம் ரிலீஸாகும்..?
No comments:
Post a Comment