ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படத்தில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வர் ஆனது போல, ஜெய்பூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஒரு நாள் போலீஸ் கமிஷ்னரான சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும், காவல்துறை மீது நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
ஜெய்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் கிரிஷ். இவருக்கு சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், தற்போது கிரிஷின் நிலைமை மோசமடைந்துள்ளதால், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனராம். இதனால், கிரிஷின் பெற்றோர் சிறுவனின் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்கின்றனர்.
இந்நிலையில், கிரிஷின் தந்தை ஜகதீஷ் சர்மா, கிரிஷிடம் உனக்கு என்னவாக வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் போலீஸ் கமிஷ்னராக வேண்டும் என்று பதிலளித்துள்ளான். தன் மகனின் ஆசையை, கிரிஷின் தந்தை ஜெய்பூர் போலீஸ் கமிஷனர் ஜங்கா ராவிடம் எடுத்துச் சென்றார். இதைக் கேட்ட ஜங்கா, அவர் சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று கிரிஷ் ஜெய்பூர் நகரின் ஒரு நாள் போலீஸ் கமிஷனராக்கப்பட்டார். ஒரு நாள் கமிஷனரான கிரிஷுக்கு போலீசார் சல்யூட் அடித்தனர். அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். மேலும் கேமராக்களுக்கு தனது காக்கி சீருடையில் சிரித்தபடி அழகாக போஸ் கொடுத்தார். இந்த விஷயம் இந்திய ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
கிரிஷ் கமிஷ்னரானதை அடுத்து அவரது தந்தை மற்றும் ஜெய்பூர் போலீஸ் கமிஷ்னர் ஜங்கா ராவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். தனது மகனின் வாழ்வில் அவர் போலீஸ் கமிஷனராக இருந்த தினம் தான் மகிழ்ச்சியான நாள் என கிரிஷின் தந்தை தெரிவித்தார்.
இது குறித்து ஜெய்பூர் கமிஷனர் ஜங்கா ராவ் கூறுகையில், ”காவல் துறையை பற்றி நல்ல எண்ணம் இருந்தால் தான் அதில் சேர வேண்டும் என்று தோன்றும். கிரிஷுக்கு காவல் துறை மீது நல்ல எண்ணமும், மரியாதையும் உள்ளதால் அவர் போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறார். இது காவல் துறைக்கு நல்ல விஷயம்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment