Friday, 1 May 2015

உரிமைகளை வென்றெடுப்பது எப்போது? வாழ்க மே தினம் .!!!


மாறிவரும் உலக மயமாக்கலுக்கு ஏற்ப தொழிலாளர் தினத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. தொழிலாளர்களின் உரிமையும் அவர்கள் வென்றெடுத்த எட்டு மணிநேர வேலையும் இன்று கேள்விக்குறியாகி விட்டது.
18 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவிலும் மேற்குலக நாடுகளிலும் வெடித்த தொழிலாளர் புரட்சி அதன் நோக்கத்தை வென்றெடுக்க துணை புரிந்தன . மாக்ஷிச கொள்கையாளர்களின் தலைமைத்துவம் அந்த நாடுகளிள் முதலாளித்துவ வர்க்கத்தின் சுரண்டலில் அடிபணிந்து கிடந்த தொழிலாளர் வர்க்கத்தை போராட வைத்ததுடன் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அடிப்படையாக அமைந்தது. தொழிலாளர் போராட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும் தொழிலாளர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமுமே புதிய வரலாற்றினை படைக்கின்றது . அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எங்கல்ஸ் தலைமையிலான சோஷலிச தலைவர்களின் சர்வதேச கூட்டம் .
தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்ற அறைகூவலே மே முதலாம் நாளை சர்வதேச தொழிலாளர் தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது . ஜனநாயகம் அல்லது மரணம் என்ற போராட்டம் 18 ஆம் நூற்றாண்டின் முடிவில் மேற்குலக நாடுகளில் வெற்றி பெற்றாலும் இன்று தொழிலாளர் களுக்கான அடக்குமுறைகள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது . இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் மனித உழைப்பின் காரணமாகவே இயங்குகின்றது . ஆனால் உழைக்கும் மக்களின் வர்க்கம் உலகில் போற்றப்படும் வர்க்கமாக போற்றப் படுகின்றதா என்றால் ஒருபோதும் இல்லை .
இன்றைக்கு உலக அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீண்டும் போராட்டத் தின்மூலம் வென்றெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது . மே தினத்தின் போராட்டங்களும் , கூட்டங்களும் வெறுமனே அரசியல் ஆர்ப்பாட்டங்களாக மட்டுமே மாறியுள்ளது . வர்ணக் கொடிகளில் தோரணங்களும் கட்சிகளின் அணிவகுப்பும் சிவப்பு கொடியின் தன்மையையும் ,மே தினத்தின் புனிதத்தையும் கொச்சைப் படுத்துவதாக அமைகின்றதே தவிர தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கான போராட்டமாக அமையவில்லை .
உலக தொழிலாளர்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் வென்றெடுத்த வேலைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீண்டும் இன்று சுக்குநூறாக உடைந்துவிட்டது . மாறிவரும் நவீன தொழிநுட்பவியலுக்கு அமைய நவீன தொழிலாளர்கள் தமது தொழிலாளர் உணர்வுகளுக்கு அப்பால் சுரண்டல் மற்றும் ஏமாற்று வர்க்கமாக மாறிவிட்டது. குறிப்பாக எமது நாட்டில் உழைக்கும் வர்க்கம் படும் பாடு அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர்கள் போராடுவது என நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கை போராட்டத்துடன் மட்டுமே முடிவடைகின்றது . குறிப்பாக தோட்டத் தொழிலாளர், அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க , தொழிலாளர் வர்க்கத்தின் இழப்பிற்கு ஈடேதும் இல்லை .
சம்பள பிரச்சினைகள் ,சலுகைகள் இன்மை , நிவாரணங்களில் ஏமாற்றம் என எல்லா விதத்திலும் ஏமாற்றம் மட்டுமே எமது தொழிலாளர் வர்க்கத்தினரிடம் எஞ்சியுள்ளது. எட்டு மணிநேர வேலை என்பது பொதுவாக கற்ற சமூக தொழிலாளர் ஒரு சிலருக்கு மட்டும் பொருந்தலாம். ஆனால் அடிப்படை தொழிலாளியான தோட்ட தொழிலாளர் , கல்லுடைக்கும் கொத்தடிமைகள் ஆலை ஊழியர் , நெசவு தொழிலாளர் , ஒப்பந்த தொழிலாளர், தினக்கூலிகள் என பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இன்னமும் ஒரு வேளை உணவுக்காக இரவு பகலாக உழைக்க வேண்டித்தான் இருக்கின்றது . உடலை வருத்தி , நோய்களுக்கும் வறுமைக்கும் உள்ளாகி தனது குடும்பத்தை காப்பாற்றத் துடிக்கும் தொழிலாளிகள் பலகோடிப்பேர் உள்ளனர் .
உரிமைகளுக்காக போராடும் உழைக்கும் வர்க்கம் தமது உரிமைகளை தாண்டி உணர்வுகளுக்காகவும் , வயிற்றுக்காகவும் போராடுவதே அதிகம் . ஆனால் அவர்களின் உரிமைகளையும் மதிக்காது உணர்வுகளையும் மதிக்காத முதலாளித்துவ வர்க்கமே இன்றும் இருந்து வருகின்றது . சுரண்டல் வர்க்கத்தின் பிடியில் வாழும் தொழிலாளர் சமூகம் தமது விடியலுக்கான போராட்டத்தில் வெற்றி காண முயற்சிக்கின்றது , தொழிலாளர்களின் பொருளாதார உரிமைப் போராட்டம் இன்றைய காலகட்டத்தில் அரசியல் போராட்டமாகவும் எழுச்சி கண்டுள்ளது . இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர் வர்க்கம் அரசியல் சாயல் இன்றி செயற்பட முடியாது .
தொழிலாளர் அமைப்புகள் . கட்சிகள் என பல்வேறு பிரிவுகளாக மாறி தமது உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் .ஆனால் அரசியல் கலாசாரம் தனித்துவ போக்கினை கையாள்வதும் , நழுவல் போக்கினை கையாள்வதும் அப்பாவி மக்களுக்குத்தான் இன்னும் விளங்கவில்லை . இன்று அரசியல் கலாசாரத்தில் கட்சிகள் மே முதல் நாளில் மக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டங்களை செய்கின்றனர் , மேடைகள் அமைத்து வாய் கிழியப் பேசுகின்றனர் . ஆனால் அவை அனைத்தும் அந்த ஒரு நாளில் மட்டுமே.
காலையில் கூட்டத்தை கூட்டி மாலையில் கூட்டத்தை கலைப்பதுவும் அந்த ஒரு தினத்தில் மட்டுமே தொழிலாளர் உரிமைகளை பற்றி பேசுவதும் மட்டுமே உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்க துணை புரியுமா? இல்லை. ஆனால் இன்று தொழிலாளருக்கான சின்னங்களை பொறித்துக்கொண்டு தம்மை மாக் ஷிச வாதிகளாக அடையாளப்படுத்தும் இடதுசாரிகளும் சரி , முதலாளித்துவ வர்க்க காரர்களின் அடிமைகளாக குனிந்து வாழும் கொள்கை இல்லா கட்சிகளும் சரி அல்லது முதலாளித்துவ கட்சியானாலும் எம் மக்களை அந்த ஒரு நாளிலேயே மறந்து விடுகின்றனர் . அதே போல் இன்றைய மே தினக் கூட்டங்கள் அனைத்தும் வெறும் அரசியல் கூட்டங்களாக மாறிவிட்டது.
தமது அரசியல் சாகசங்களை பறைசாற்றவும் , அடுத்த கட்சியினரை சேறு பூசும் வார்த்தைகளால் வர்ணிக்கவுமே மே தினக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன . அதையும் தாண்டி கட்சிகளின் பலத்தினை நிரூபிக்க கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் நிகழ்வுகளையும் நாம் அவதானிக்கலாம் . மதுபானங்களையும் , பணத்தையும் கொடுத்து நாட் கூலிகளாக்கி மக்களை மே தினத்திற்கு கூட்டிக்கொண்டு வந்த வரலாறுகளும் அண்மைய அரசியல் கலாசாரத்தில் அவதானிக்க முடிந்தது . ஆனால் எமது தொழிலாளர் வர்க்கம் இதை உணராது முதலாளித்துவ வர்க்க நாடகத்தில் நடிக்கின்றமை வருந்தத்தக்க செயற்பாடே . எனினும் மக்களின் பசி, பட்டினியை போக்க வேறு வழியில்லாது தமது வயிற்றுக்காக தொழிலாளர்கள் வாழ்கின்றனர் என்பதே உண்மை .
நவீன தொழிலாளர் வர்க்கம் நவீன மோகத்தில் சுரண்டப்படுகின்றது . இளம் தொழிலாளர் தமது கல்விக்கேற்ற வேலையின்றி தவிக்கின்றனர் . இன்னொரு படித்த சமூகம்தொழிநுட்ப கல்வி என்ற வாட்டலில் தமது இளமையையும் ஆளுமையையும் இழக்கின்றனர் . இந்த சமூகம் தமது வாழ்நாளில் இறுதிவரை போராடும் வர்க்கமாக மட்டுமே வாழ்ந்து மடியும் அவல நிலை இன்னும் எத்தனை காலம் தொடரும் மீண்டு மொரு தொழிலாளர் புரட்சியால் தொழிலாளர் வர்க்கம் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமா அல்லது 18 ஆம் நூற்றாண்டுகளில் போல் பசி பட்டினியால் பல இழப்புகளை எதிர்கொண்டு மீண்டும் ஒரு கொள்கை வாதத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமா என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது .
அரசியல் சாயம் பூசிய ஒவ்வொரு மே தினத்தில் இருந்து இந்த மே தினமாவது விடுபட வேண்டும் . ஒரு நாள் கூத்தாக மாறி வரும் தொழிலாளர் தினமாக மட்டும் கருதாது உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் தினமாக மே முதல் நாளை மாற்றியமைக்க வேண்டும் . ஒவ்வொரு மே தினமும் உலகத் தொழிலாளர் வர்க்கத்தை எழுச்சி பெறச் செய்யும் . உலகைத் தொழிலாளர்களை அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும் நாளாக மாற்றியமைக்க வேண்டும் .
வாழ்க மே தினம் .!!!

No comments:

Post a Comment