ஜூன் 1
மர்லின் மன்றோ பிறந்த தினம்!!
1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. ஒன்றரை மில்லியன் டாலருக்கு கால் மணி நேர படமே இதற்கு சான்று.
மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும், 36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை, ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது. மர்லின் மன்றோ பிறக்கும்போது அவரது தாயார் கிளாடிஸ் மன்றோ பேக்கர் தனது முதல் கணவர் ஜாஸ்பர் பேக்கரை பிரிந்து எட்வர்ட் மார்டின்சன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். மர்லினின் தந்தை யார் என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது.
அப்பாவை தேடிய நீண்ட பயணமாக மர்லினின் வாழ்க்கையை எளிமையாகக் கூறலாம். அப்பா என்ற உறவு வாழ்க்கையில் ஏற்படுத்திய வெற்றிடம் மர்லினுக்கு இறுதிவரை ஒரு அலைக்கழிப்பாக தொடர்ந்தது. அறுபது வயதான ஆர்தர் மில்லரோடு மர்லின் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டிருந்தாலும் அவரை டாடி என்றே அழைத்து வந்ததை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மர்லினின் இளமைப் பருவம் கொடியது.
பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்பு பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள். பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு வளர்ப்பு பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட, அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
16 வயதில் நடந்த மர்லினின் முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை. வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 1944-ல் மர்லினின் வாழ்க்கை புதிய மாறுதலுக்குள்ளானது. டேவிட் கொனோவர் என்ற புகைப்படக் கலைஞர் Yank பத்திரிக்கைக்காக மர்லினை சில புகைப்படங்கள் எடுத்தார். மர்லினின் அபிரிதமான அழகை முதலில் கண்டுணர்ந்தவர் கொனோவரே.
1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.
1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. வெற்றிகரமான நடிகையாக திகழ்ந்தாலும், மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் பிரச்சனைகளுக்கு உள்ளானார். ஆகஸ்டு 5, 1962ஆம் ஆண்டு இவர் தற்கொலை செய்து கொண்டார்.
இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை எடிசன் பெற்றார்.
1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
சிறப்பு நாள்:
பன்னாட்டு குழந்தைகள் தினம்.