‘பசங்க’,‘கோலிசோடா’ படங்களை தொடர்ந்து ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் நடிக்கும் படம் வஜ்ரம். ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக பி.ராமு தயாரித்திருக்கும் இப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 26ஆம் தேதி சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
அப்போது விழாவில் பேசிய மயில்சாமி, ‘வஜ்ரம் ‘படப்பிடிப்பு அருமையாக இருந்தது. மூணார் போனோம் அங்கே குரங்குகளே இல்லை. ஆச்சரியமாக இருந்தது. ஆனால் குற்றாலத்தில் குரங்குகள் தொல்லை. எதை எடுத்தாலும் தூக்கிச் சென்று சாப்பிட்டுவிடும். அவை எதை வேண்டுமானாலும் தூக்கும். எதைக் கொடுத்தாலும் சாப்பிடும் என்றார்கள்.
எதைக் கொடுத்தாலும் சாப்பிடுமா.. இப்போ பார்க்கலாம் என்று என் உதவியாளாரிடம் 2 முழு பாட்டில் சரக்கை வாங்கிவரச் சொன்னேன். அதை குரங்குகளுக்குக் கொடுத்தேன் .குடித்து விட்டு மயங்கின.உருண்டன.. புரண்டன. இப்படி அதுகளின் கொட்டம் அடங்கியது” என்று நகைச்சுவையுடன் கூறினார்.
மயில்சாமியின் இந்தப் பேச்சு மீடியாக்களில் குறிப்பாக இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் மயில்சாமியிடம் எஸ்.பி.சி.ஏ. கவுரவ செயலாளர் தி.தியாகராஜன் தலைமையில் முதன்மை ஆய்வாளர் தவுலத்கான், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் மயில்சாமியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையின்போது நடிகர் மயில்சாமி அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் “ஒரு நகைச்சுவை நடிகன் என்ற முறையில், நகைச்சுவைக்காக பேச்சில் ஒரு ‘ஜனரஞ்சகம்’ இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் அந்த மேடையில் அப்படி பேசினேன். ஆனால் அப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையில் நடக்கவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது தவறை ஒப்புகொண்ட அவர் இப்படி பேசியதற்காக தனது ஆழ்ந்த மன வருத்தத்தையும் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
இனி விலங்குகளை துன்புறுத்தும் வகையான பேச்சினை நகைச்சுவைக்காகக்கூட பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கி அங்கிருந்து சென்றிருக்கிறார்கள் அதிகாரிகள். மயில்சாமியின் பேச்சு, பிராணி வதை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகுமாம்.
இது குறித்து எஸ்.பி.சி.ஏ. அதிகாரி தி.தியாகராஜன் கூறுகையில், ‘‘குரங்குகளுக்கு மது ஊற்றியது தொடர்பான பேச்சு, நகைச்சுவைக்காக மட்டுமே பேசியதாக நடிகர் மயில்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தும் வகையான பேச்சினை இனி நகைச்சுவைக்காக கூட பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

No comments:
Post a Comment