சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் அமிதாப்பச்சனுக்கு சம்மன் வழங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது நாடு தழுவிய அளவில் சீக்கிய இன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கலவரத்தை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் தூண்டிவிட்டார் என்று கூறி அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பான சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் என்ற அமைப்பின் சார்பில் அதன் சட்ட ஆலோசகர் குருபத்வந்த் பன்னூன் என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த சம்பவம் நடந்து, முடிந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது இந்த வழக்கால் அமிதாப் பச்சனுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பன்னூன் தனது மனுவில் கூறியிருப்பதாவது, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு ரத்தத்திற்கு ரத்தம் என்று கோஷமிட்டு கலவரத்தை தூண்டியதே அமிதாப் பச்சன் தான் என்று தெரிவித்துள்ளார்.
காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த அமிதாப் பச்சன், 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
பன்னூனின் மனுவை ஏற்றுக் கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்குமாறு அமிதாப் பச்சனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மன், அமிதாப்பச்சனின் ஹாலிவுட் மேலாளர் டேவிட் ஏ.உங்கரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க சட்ட விதிகளின்படி, சம்மன் ஒப்படைக்கப்பட்ட 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர் பதில் அளிக்க வேண்டும்.
அதன்படி, வருகின்ற மார்ச் 17 ஆம் தேதிக்குள் அமிதாப்பச்சன் பதில் அளிக்க வேண்டும். அப்படி அவர் பதில் அளிக்க தவறும்பட்சத்தில், அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கக் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தை அணுகப் போவதாக சீக்கிய உரிமை அமைப்பின் சட்ட ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment