1984 ஆம் ஆண்டு விஜயகாந்த், மோகன், சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘நூறாவது நாள்.’ அந்த காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திகில் படம் இது.
சமீபத்தில் இந்த படத்தை மீண்டும் எடுக்கப் போவதாகவும், அதில் ‘சதுரங்க வேட்டை’ புகழ் நட்ராஜ் நடிக்கப் போவதாகவும் மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் கூறியிருந்தார். ரகு மணிவண்ணன் ஏற்கனவே சில படங்களில் நடித்து இருக்கிறார். ‘நூறாவது நாள்’ படத்தை ஹாலிவுட் பாணியில், ‘ரீபூட்’ என்ற தொழில்நுட்பத்தில் தானே டைரக்டு செய்யப் போவதாக அவர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் ரகு மணிவண்ணன் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ‘நூறாவது நாள்’ படத்தை தயாரித்த எஸ்.என்.எஸ்.திருமாலின் மகள் ஜே.பத்மாவதி ஒரு புகார் கொடுத்து இருக்கிறார்.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- ‘‘மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள், 24 மணி நேரம் ஆகிய 2 படங்களையும் என் தந்தை எஸ்.என்.எஸ்.திருமால் தயாரித்து இருந்தார். அந்த படங்களின் உரிமைகள் என்னிடம் உள்ளன. இதுபற்றி இயக்குநர் மணிவண்ணனே எழுதிக் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில், ‘நூறாவது நாள்’ படத்தை மீண்டும் இயக்கப் போவதாக ரகு மணிவண்ணன் கூறியிருக்கிறார். இதற்காக, அவர் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. படத்தின் உரிமை தயாரிப்பாளரிடம் இருக்கும்போது, அனுமதி பெறாமல் அதை மீண்டும் தயாரிப்பது சட்டப்படி குற்றமாகும்.
இதுதொடர்பாக, ரகு மணிவண்ணனுடன் வேறு யாராவது தொடர்பு வைத்திருந்தால், அவர்களும் அந்த குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதாக கருதப்படுவார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.’’ என்று அந்த புகார் மனுவில் ஜே.பத்மாவதி கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment