Tuesday, 24 February 2015

அம்மா பிறந்த நாள்: அ.தி.மு.க. கொண்டாட்டம்!! மக்கள் திண்டாட்டம்!!


நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமன ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள். சும்மா அ.தி.மு.க., தொண்டர்கள் அப்படி.
இதில் பிறந்த நாள் வேற. சும்மா இருப்பார்களா…? நேற்று முழுவதும், கோவில்களில் சிறப்பு பூஜை, அலகு குத்து, அன்ன தானம், மரம் நடுதல், 67 கிலோ கேக், பிரியாணி, டி.வி. நிகழ்ச்சி என்று ஒரு கை பார்த்து விட்டனர்.
சாலையோரம் இருந்த சுவரொட்டிகளில் எல்லாம் ‘அம்மா’, ‘மக்கள் முதல்வர்’ என்ற வாசகங்களோடு ஹைக்கூ கவிதைகளாகவே தென்பட்டன. அ.தி.மு.க., தலைமை அலுவலகம் நேற்று காலையில் இருந்தே திருவிழா போல் இருந்தது.
காலையிலேயே வழியில் போவோர் வருவோருக்கு, இனிப்புகள் வழங்க ஆரம்பித்து விட்டனர் ஜெ., தொண்டர்கள். விழாவைச் சிறப்பிக்க மகளிர் அணியினரும் வரவழைக்கப்பட்டனர்.
67 கிலோ கேக்
தலைமை அலுவலகத்தில், ஜெ.,வின் 67வது பிறந்த நாளுக்காக 67 கிலோ கேக் வெட்டி அசத்தி விட்டனர் அமைச்சர்களும், முதல்வரும்.
பட்டாசு காதைக் கிழிக்க, புகை மூட்டத்துக்கு நடுவில், மகளிர் குழுவினர் பச்சை நிற சேலையில் இரட்டை இலையை குறிப்பிடுவது போல் ஜரிகை வைத்த புடவையோடு வந்து பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.
பா.வளர்மதி, நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்ட அமைச்சர்களுடன், பன்னீர் செல்வமும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டார். அ.தி.மு.க.,வினர் அனைவரும் சேர்ந்து மொத்தமாக சேர்ந்து அம்மா சார்பில் கேக்கை வெட்டினர்.
இந்த கேக் வெட்டும் போது, எப்போதும் போல, முதல்வர் பன்னீர் பின்னாடி போய் ஒளிந்து கொண்டார். அவரை முன்னாடி அழைத்து அவர் முன்னிலையிலேயே கேக்கை வெட்டியுள்ளனர்.
அம்மா மலர்
ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அம்மா மலரையும், முதல்வர் ஓ.பி.எஸ்., முன்னிலையில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.
கேக்குக்காக வந்த கூட்டம்
அமைச்சர்கள், ஒருவருக்கு ஒருவர் கேக்கை ஊட்டி விட்டுக் கொண்டு கொண்டாடினர்.
இதற்கிடையில், கூட்டம் சேர்பத்தற்காக வரவழைக்கப்பட்ட மகளிர் அணியினர், கேக்கை எடுத்துக்கலாம் என்ற குரல் கேட்டதும் ஆளுக்கு இரு கை நிறைய கேக்கை வாரி எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தனர்.
அடுத்தது பிரியாணி
கேக் காலியான உடனேயே வெளியில் வைத்து பிரியாணியை வினியொகித்தனர். பிறந்த நாள் கொண்டாட வந்த மகளிர் அணியினருக்கு மதிய உணவும் அங்கேயே முடிந்து விட்டது.
சாப்பாட்டை சாப்பிட்டுட்டு சும்மா போகலாமா, ஏதாவது செய்யனும் இல்ல.. அதுக்காகவே மகளிர் அணி ஒன்று கூடி ஒரு குத்தாட்டம் போட்டு அமோகப் படுத்தியது.
குத்தாட்டத்தோடு நிறுத்தாமல், மக்கள் முதல்வர் அம்மா வாழ்க… வாழ்க… என்று ஜெ.,க்கு ஒரு ஜே வைப் போட்டு மீதி இருந்த பிர்யாணி கேக்கை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினர் மகளிர் அணியினர்.
எப்போதும் போல் ஓ.பி.எஸ்
கூட்டம் கூடி கொண்டாடிக் கொண்டிருந்த அ.தி.மு.க.வினரை எப்போதும் போல் ஒரு ஓரமாக, அமைதியாக நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் ஓ.பி.எஸ்.
ஜெயா டிவி அரை மணி நேரம் அம்மா துதி
ஜெயா டிவியில், பிறந்த நாளுக்காக சிறப்புச் செய்தியை வாசித்தார் நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு. மதியம் 1 மணியளவில், அரை மணி நேரம் ஒளிபரப்பாகிய அந்த செய்தி முழுவதுமே அம்மா துதி என்று தான் சொல்ல வேண்டும்.
மக்கள் முதல்வர், அம்மா இந்த இரண்டு வார்த்தைகளையே மாத்தி மாத்தி அரை மணி நேரம் பேசினார் பாத்திமா. 24 மணி நேர செய்திச் சேனலான ஜெயா பிளஸ்ஸில் மட்டும், அம்மா செய்திகளுக்கிடையில், அடிக்கடி பொதுச் செய்திகளும் எட்டிப் பார்த்தன.
அதுவும் அம்மா செய்தி கிடைக்காததால் தான் வந்தது போல.
மக்கள் ரியாக்ஷன்
தலைமையகமும், டி.வி. சேனலும் அம்மா பிறந்த நாளை அமோகமாக கொண்டாடியது போலவே தமிழகம் முழுவதும் அந்தந்த ஏரியாக்களில் உள்ள அ.தி.மு.க., தொண்டர்கள் அம்மா பிறந்த நாளை அவர்கள் ஸ்டைலில் கொண்டாடினர்.
நல்ல பெரிய ஸ்பீக்கர்களை காலையிலேயே வாடகைக்கு எடுத்து தெரு முனைகளில் வைத்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடல்களை அலற விட்டனர்.
இதோடு பட்டாசும் சேர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை, கதி கலங்க வைத்து விட்டது. இப்படி இருந்தால் மக்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம், உங்களுக்கே தெரிந்திருக்கும்.

No comments:

Post a Comment